ஆப்கானில் 3 பெண் ஊடக பணியாளர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் தொலைக்காட்சி நிலையம் ஒன்றில் பணி புரியும் மூன்று பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இடம்பெறும் படுகொலைச் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஒருங்கிணைந்த வெவ்வேறு தாக்குதல்களில் 18 மற்றும் 20 வயதுடைய இந்தப் பெண்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நான்காமவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னணியில் இருந்த துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் பொலிஸார் அவர் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளனர். இதில் தமக்கு தொடர்பு இல்லை என்று அந்த அமைப்பு மறுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் புள்ளிகளை இலக்கு வைத்து இவ்வாறான படுகொலை சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கொல்லப்பட்ட இந்த மூன்று பெண்களும் அண்மையில் உயர் கல்வியை பூர்த்தி செய்துவிட்டு எனிகாஸ் தொலைக்காட்சி நிலையத்தின் ஒலிச் சேர்க்கை பிரிவில் பணியாற்றி வந்துள்ளனர். இதில் முர்சால் வாஹிதி என்ற பெண் தமது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதோடு ஷாஹ்னாஸ் மற்றும் சாதியா என்று மாத்திரம் அடையாளம் கூறப்பட்ட மற்ற இரு பெண்களும் கூட தமது வீடுகளுக்கு திரும்பும் வழியில் கொல்லப்பட்டுள்ளனர்.

Thu, 03/04/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை