1,000 ரூபா சம்பள அதிகரிப்பு; ஓரிரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வாக 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலுக்கிணங்க செயற்படாத நிறுவனங்களுக்கு எதிராக தொழில் திணைக்களத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே 700 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டதுடன் மேலதிக கொடுப்பனவாக 50 ரூபாவும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய கொடுப்பனவாக 160 ரூபா வழங்கப்பட்டது.

அத்தகைய பின்னணியில் புதிய தீர்மானத்தின்படி நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய கொடுப்பனவாக 230 ரூபாவை தோட்டக் கம்பனிகள் வழங்க வேண்டியுள்ளது. அந்தவகையில் தோட்டத்தொழிலாளர் களுக்கான நாளாந்த சம்பளம் 1,230 ரூபாவாக அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்.

இம்முறை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ள தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 03/04/2021 - 07:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை