மாத்தளை மாசிமக திருவிழா ஆலய உள்வீதியில் மட்டுமே

- பரிபாலன சபை தலைவர் தகவல்
- மாத்தளை முத்துமாரி அம்பிகையின் தேரோட்டமதனை அகக்கண்ணால் காண்போம்

மாத்தளை அருள்மிகு அன்னைமுத்துமாரிஅம்பிகையின் வருடாந்த மாசிமக மகோற்சவம் கொவிட் 19 காரணமாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்,சுகாதாரஅதிகாரிகளின் ஆலோசனைக்கமைய இம்முறை நடைபெறும்.

வருடாந்த உபயகாரர்கள் பரிபாலன சபை உறுப்பினர்கள் உட்பட வரையறுக்கப்பட்ட பக்தர்கள் மாத்திரமேஅனுமதிக்கப்படுவரென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரிபாலன சபையின் தலைவர் விக்னேஸ்வரன் சர்வானந்தன் தெரிவித்துள்ளார்.

வழமையாக நடைபெறும் கொடியேற்ற ஊர்வலம், பரவைக் காவடி, பால்குட பவனி, பஞ்சரத பவனி யாவும் அரச ஆலோசனைப்படி ஆலயத்தினுள்ளேயே நடைபெறும். வெளிமாவட்டத்தில் இருந்துவரும் அடியார்கள், சிரேஸ்ட பிரஜைகள், சிறுவர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து அம்பிகையை தரிசிப்பதை தவிர்த்து தங்கள் இல்லங்களில் இருந்தே வழிபடுமாறு பரிபாலன சபையினர் சார்பில் வேண்டுகிறோம்.

அபிசேஷம், ஆராதனை, உள்வீதி திருவிழா யாவும் இணையதளம் வழியாக பார்வையிட்டு அம்பிகையின் அருட்கடாட்சத்தை பெற ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் 03ஆம் திகதிவரை கொவிட் - 19 சுகாதார நடைமுறைகளுக்கமைய பூஜைகள் யாவும் நடைபெறும். வழமைபோல் சுவாமிகளை பக்த அடியார்கள் தங்கள் கரங்களால் தூக்கி ஆராதிப்பதை தவிர்த்து அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளில் உள்வீதி வளம் வரும் என்பதையும் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

மாத்தளை முத்துமாரி அம்பிகையின் தேரோட்டமதனை அகக்கண்ணால் காண்போம்

ஓம் சக்தி, ஓம் சக்தி என உளமார அழைத்திட்டால் ஓடோடி வருபவளே நம் அகிலாண்ட நாயகியாம் அன்னை பராசக்தி, அழுத பிள்ளையின் குரல்கேட்டு, அரவணைத்து பால் கொடுத்த பாலாம் பிகையல்லவா நம் பராசக்தி. அகிலத்திற்கே அன்னையாய் எம்மை அரவணைத்து காக்கின்ற அம்பிகையே, அழகுமலையின் அடிவாரத்தில் அன்னை 'முத்துமாரி' எனும் நாமத்தோடு, பன்னகமாம் பதியாகிய மாத்தளையின் மண்ணிலே வீற்றிருந்து, ஆண்டாண்டு காலமாக மாசிமாத மக நட்சத்திரத்தில் மங்கலம் நல்கிட பஞ்சரத பவனியிலே நடுநாயகியாய் வலம் வந்து பக்தர்தம் அஞ்ஞான இருள் அகற்றி மெய்ஞானமெனும் அருள் ஒளி நல்கி, உலகெங்கும் வாழும் இந்துக்களுக்கும் தன் அருள் மாரி பொழிவது என்பது வராற்றுச் சான்றும், சிறப்பும் மிக்கது என்பதை இந்துக்களாகிய நாம் அனைவரும் அறிந்ததே!

அவ்வகையில் இவ்வருடமும் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இருபத்தைந்து நாட்கள் அன்னை முத்துமாரி அபிசேகம், அலங்காரம், ஆராதனை என விழாக்கோலம் பூண்டு கணபதி, சிவன், அம்பாள், முருகன், சண்டேஸ்வரி சகிதமாக பஞ்சரதத்திலே சித்திரத் தேரிலே பவனிவரும் காட்சியை காணாத கண் தான் என்னவோ? என சிந்திக்க வேண்டிய நிலையில், நாம் இலங்கை நாட்டின் இன்றைய சூழ்நிலையிலே 'கொரொனா 19' என்ற கொடிய அசுரன் கையில் சிக்கித் தவித்து, ஆலயவழிபாடு, அபிசேகம், ஆராதனை என அகக்காட்சியில் காணவேண்டிய நிலையில் இருக்கின்றோம். எனவே இன்றைய நிலைமைகளை கருத்தில் கொண்டு நாமும் நம் நாடும் ஆரோக்கியமான, ஆன்மீக உணர்வுகொண்டு அன்பே வடிவானவர்களாக வாழ அன்னை மாரியின் தேரோடும் காட்சியையும் நம் அகக்கண்களால் தான் கண்டு களிப்போமோ.

நாவலப்பிட்டி சுழற்சி நிருபர், மாத்தளை சுப்ரமணியம் புண்ணியசீலன்

Fri, 02/05/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை