ரூ.1000 சம்பள உயர்வை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்த போராட்டம்

- அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு

பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி இன்றைய தினம் முன்னெடுக்கவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கட்சி, தொழிற்சங்கம், வர்க்க இன, மத, மொழி பேதம் இன்றி ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த பணிப்பகிஷ்கரிப்புக்கு அனைத்து தோட்ட தொழிலாளர்களும் மலையக தொழிற்சங்கங்களும், நுவரெலியா மாவட்ட வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், ஆசிரிய தொழிற்சங்கங்கள், இளைஞர்கள், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பொது மக்கள் என பலரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் நுவரெலியா பிரதேச சபை காரியாலயத்தில் நேற்று (04.02.2021) நடைபெற்ற ஊடக மாநாட்டில் பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜா தெரிவிக்கையில்,

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முயற்சித்த பொழுதும் கடந்த பேச்சுவார்த்தையின் போது 200 ரூபாய் சம்பள உயர்வு மட்டுமே பெற முடிந்தது.

இன்று இ.தொ.கா வின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இந்த ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார்.

அதன் ஆரம்பகட்டமாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும், சம்பள நிர்ணய சபைக்கும், அரசாங்கத்திற்கும் ஒரு அழுத்தம் கொடுக்கும் முன்னோடி ஏற்பாடாக அமைதியான ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக கைகோர்க்க வேண்டும் என இதன்போது வேலு யோகராஜா கேட்டுக் கொண்டார்.

இதேவேளை தோட்ட தொழிலாளர்களுக்கான ரூபா 1000 சம்பள கோரிக்கைக்கான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு மலையக ஆசிரிய தொழிற்சங்கங்களும் தமது பூரண ஆதரவை வெளிட்டுள்ளனர். நேற்று (04.01.2021) வியாழக்கிமை மதியம் ஹற்றனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ரெங்கராஜ் சங்கரமணிவண்ணன். ஆசிரிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ் நாதன், இ.தொ.க மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், மலையக ஆசிரிய முன்னணியின் இணைப்பாளர் என்.வி.கிங்ஸ்லி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மலையகத்தின் அனைத்து ஆசிரியர்களும் தமது சமூகத்தின் சம்பள உயர்வுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு செல்லாது சுகவீன விடுமுறை அறிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

மேலும் இ.தொ.க மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் வர்த்தக சமூகத்தினர் உட்பட அனைத்து தரப்பினரும் தமது இந்த அடையாள வேளை நிறுத்த போரட்டத்திற்கு ஆதரவு தருவதற்கு முன் வந்திருப்பதாகவும் எனவே நாளை மலையகம் முடங்கும் என்றும் தெரிவித்தார்.

ஹற்றன் விசேட, ஹற்றன் சுழற்சி,லிந்துலை, கொட்டக்கலை, தலவாக்கலை குறூப் நிருபர்கள்

Fri, 02/05/2021 - 10:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை