மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சி தலைவர்கள் மீது அமெரிக்கா தடை

மியன்மார் இராணுவ சதிப்புரட்சித் தலைவர்கள் மீது தடை விதிக்கும் உத்தரவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இதில் இராணுவத் தலைவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்ட வர்த்தகங்கள் இந்தத் தடையில் உட்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள மியன்மார் அரசின் நிதியான 1 பில்லியன் டொலரை இராணுவம் பெறுவதற்கும் இதில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக மியன்மாரில் ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருவதோடு, ஆர்ப்பாட்டத்தின்போது தலையில் சுடப்பட்ட பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தலைநகரில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு தண்ணீர் பீச்சியடித்து இரப்பர் தோட்டக்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதே மியா த்வே த்வே கெயிங் என்ற அந்தப் பெண் சுடப்பட்டார்.

மியன்மார் ஆளும் கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி மற்றும் சிவில் அரசின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்தே இராணுவம் கடந்த வாரம் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த ஒன்றுகூடுவதற்கு தடை மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தபோதும் அதனை மீறி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் பலப் பிரயோகத்தை பயன்படுத்த ஆரம்பித்திருப்பதால் பலரும் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இராணுவ சதிப்புரட்சியில் இருந்து மீண்டும் ஆங் சான் சூச்சி உட்பட சிவில் தலைவர்களை விடுவிக்கும்படி பைடன் அழைப்பு விடுத்திருந்துள்ளார். “பர்மா (மியன்மார்) மக்கள் தமது குரலை உரத்து எழுப்புகின்றனர். அதனை உலகம் பார்த்திருக்கிறது” என்று குறிப்பிட்ட பைடன், இதற்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

முதல் கட்டமாக தடைக்கு உள்ளாகும் இலக்குகளை நிர்வாகம் அடையாளம் காணும் என்று பைடன் கூறினார். ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான வன்முறை தொடர்பில் ஏற்கனவே சில மியன்மார் இராணுவத் தலைவர்கள் தடைக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் மியன்மார் இராணுவம் தொடர்ந்து சுற்றுவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டு மேலும் பலரை கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 02/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை