இரண்டு வாரங்களுக்குள் தீர்வு தர தொழில் ஆணையாளர் உறுதியளிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரித்து வழங்குவது தொடர்பில் சம்பள நிர்ணய சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியுமென தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களில் அதற்கான தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியாமல் போனால் சம்பள கட்டுப்பாட்டு சபையின் அங்கத்தவர்களிடையே வாக்கெடுப்பு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க தேயிலை பயிர்ச் செய்கை தொழில்துறை மற்றும் இறப்பர் பயிர்ச்செய்கை தொழில்துறை ஆகியவற்றின் சம்பள கட்டுப்பாட்டு சபையுடனும்பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்;

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள போதும் அந்தப் பேச்சுவார்த்தை எந்த இணக்கப்பாடும் இன்றி நிறைவு பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் மேற்படி இரண்டுசம்பள கட்டுப்பாட்டு சபைகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அதிலும் இணக்கப்பாடு காணப்படாவிட்டால் சம்பள நிர்ணய சபை அங்கத்தவர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பள கட்டுப்பாட்டு சபையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் 8 பேர், முதலாளிமார் சங்கத்தின் பிரதிநிதிகள் 8 பேர், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மேலும் மூன்று பேர் உள்ளடங்குகின்றனர் அதன் தலைவராக தொழில் ஆணையாளர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 02/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை