இன்று 73ஆவது சுதந்திர தினம்

- சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி  கோட்டாபய தலைமையில் பிரதான வைபவம்
- கடுமையான சுகாதார வழிகாட்டலுடன்  எளிமையான வைபவம்

இலங்கையின் 73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு இன்று 04ஆம் திகதி கொழும்பு -7 சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெறும்.

நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு சுகாதார வழிமுறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அதிதிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன் தேசத்தின் அபிமானத்தை பாதுகாக்கும் வகையில் வழக்கம் போன்று எவ்வித குறைப்பாடுகளுமின்றி கம்பீரமானதாகவும் எளிமையான முறையிலும் இந்த நிகழ்வை நடத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்தன  முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.

இம்முறை நடைபெறவுள்ள சுதந்திர தின பிரதான நிகழ்வில் ஐயாயிரத்திற்கும் அதிகமான முப்படை வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் பிரதமர், சபாநாயகர், முப்படைகளின் தளபதிகள் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் பலரும் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

சுதந்திரதின பிரதான நிகழ்வின் சகல ஏற்பாடுகளும் நிறைவுற்றுள்ள நிலையில் முப்படையினரின் இறுதி ஒத்திகைகள் இடம்பெற்றன. மேற்படி இறுதி ஒத்திகைகளை நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ நேற்று முன்தினமும், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன நேற்றை தினமும் முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபருடன் இணைந்து பார்வையிட்டதுடன் தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.இம்முறை சுதந்திர தின பிரதான அணிவகுப்பில் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் இராணுவத்தைச் சேரந்து 3153 பேரும், கடற்படையைச் சேர்ந்த 821 பேரும், விமானப் படையைச் சேர்ந்த 740 பேரும் பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்த 510 பேரும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 457 பேரும் அடங்குவர். மட்டுப்படுத்தப்பட்ட வகையிலேயே முப்படையினர் இம்முறை பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அனைத்து பாதுகாப்பு படையினரும் முககவசங்கள் அணிந்த நிலையில் இந்த மரியாதை அணிவகுப்பில் கலந்து கொள்கின்றமை விஷேட அம்சமாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதம நீதியரசகர் ஜயந்த ஜயசூரிய, எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக்க உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுதந்திர தின நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர்.

சுதந்திர தின பிரதான நிகழ்வை முன்னிட்டு கொழும்பு-7 சுதந்திர சதுக்கம் உட்பட அதனை அண்டிய பிரதேசம் எங்கும் தேசிய கொடிகள் மற்றும் வர்ண கொடிகள் பறக்கவிடப்பட்டு அந்தப் பிரதேசம் விழாக்கோலம் பூண்டு காணப்படுகின்றன. அத்துடன் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேசிய கொடியை சம்பிரதாய முறையில் ஏற்றி ஜனாதிபதி சுதந்திர தின பிரதான நிகழ்வை ஆரம்பித்து வைப்பதுடன் சுதந்திர சதுக்கத்திலிருந்து நாட்டு மக்களுக்க விஷேட உரை நிகழ்த்துவார். அத்துடன் ஜனாதிபதிக்கு மரியாதை நிமிர்த்தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்படும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் இரண்டாவது சுதந்திர தின வைபவம் ஆகும்.

இம்முறையும் வழமைப் போன்று தேசிய கீதம் சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகளின் மாணவ, மாணவிகளால் பாடப்படவுள்ளதுடன் ஜயமங்கள காதாவும் இசைக்கப்படவுள்ளன. இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை, தேசிய இளைஞர் படை, ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான படைவீரர்களின் மரியாதை அணிவகுப்பும், முப்படைவீரர்களின் சாகசங்களும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம்பெறவுள்ளமை விஷேட அம்சமாகும்.

அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரண்ணாகொட, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ பி ஜயசுந்தர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரட்ண, ஆகியோரும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து சிறப்பிப்பர்.

இலங்கை இராணுவத்தின் பிரதான பதவிநிலை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னோண்டோ சுதந்திர தின முப்படை பிரதான அணிவகுப்பின் கட்டளை தளபதியாகவும் பிரிகேடியர் ஹரேந்திர பீரிஸ் இரண்டாவது கட்டளை அதிகாரியாகவும் செயற்படவுள்ளனர்.

கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி கொமொடோர் இசுரு காசிவத்தவும், சீனக்குடா விமானப் படைத் தளத்தின் தளபதி எயார் கொமொடோர் பந்துல எதிரிசிங்கவும் தலைமை வகித்து செல்லவுள்ளனர். அனைத்து பாதுகாப்பு படையினரும் முககவசங்கள் அணிந்த நிலையில் இந்த மரியாதை அணிவகுப்பில் கலந்து கொள்கின்றமை விஷேட அம்சமாகும்.

இராணுவ அணிவகுப்பில் இராணுவத்தின் ஆயுதங்கள், கனரக கவச வாகனங்கள், யுத்த தளபாடங்கள், உபகரணங்கள். ஆட்டிலரி, பீரங்கி தாங்கிய வாகனங்கள், மோப்ப நாய்கள் பொறியியல் உபகரணங்கள் உட்பட யுத்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இராணுவம் பயன்படுத்தும் பல்வேறு வாகனங்களும் அணிவகுத்து செல்லும்.

அதேபோன்று கடற்படையின் எட்டு வகையான பிரிவினர் அணிவகுப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் கடற்படையின் விஷேட படகு பிரிவினர், மீட்பு பிரிவினர், மெரைன் படைப் பிரிவினர், பெண்கள் படைப்பிரிவினர் இதில் அடங்குவர்.

விமானப் படையினரும் தரையில் தமது பிரிவுகள் பிரதிநிதித்துவப்படுத்தி விமானப் படையினரால் பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் அணிவகுத்து செல்லவுள்ள அதேசமயம் கொழும்பு சுதந்திர சதுக்க மற்றும் அதனை அண்டிய வான் பரப்பில் விமானப் படையின் பல்வேறு ரக விமானங்கள், ஹெலிகொப்டர்கள், தாக்குதல் விமானங்கள் உள்ளடங்கலாக 26 வகை விமானங்கள் தேசிய கொடியை பறக்க விட்ட நிலையில் வானில் சாகசங்களை காண்பித்த வண்ணம் அணிவகுத்து பறந்துச் செல்லும். எப்7, ரக தாக்குதல் விமானங்களும், எம்ஏ 60, வை12, பிரி6, ரக விமானங்களும், பெல் 412, பெல் 212, எம்ஐ 17 ரக ஹெலிகொப்டர்களுமே கொழும்பு வான் பரப்பில் தமது சாகசங்களை காண்பிக்கும்.

பொலிஸாரின் அணிவகுப்பிற்கு மேலதிகமாக பொலிஸாரின் மிகவும் பழைமை வாய்ந்ததும் பாரம்பரியதுமான பாண்ட் வாத்தியங்களுடன் அணிவகுத்து செல்லவுள்ளனர். அத்துடன் இம்முறையும் மரியாதை அணிவகுப்பில் பொலிஸ் குதிரைப் படையினரும் கலந்து கொள்ளவுள்ளனர். பொலிஸாரை தொடர்ந்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் அணிவகுத்து செல்லவுள்ளனர்.

இது தவிர சிவில் பாதுகாப்பு படை மற்றும் தேசிய மாணவர் படையணியினர் மற்றும் தேசிய இளைஞர் படையணியினரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அத்துடன் முப்படையினர் பொலிஸார், சிவில் பாதுகாப்பு படை, தேசிய இளைஞர் பேரவை, மாகாண சபைகள் மற்றும் கலாசார நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இசை மற்றும் நடன கலைஞர்கள் 340 பேர் பங்குபற்றுவுள்ளனர்.

அத்துடன் தேசத்திற்காக அர்ப்பணித்தவர்களை நினைவு கூர்ந்து காலி முகத்திடல் கலங்கரை விளக்கு பிரதேசத்திலிருந்து வழக்கமாக பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும். இம்முறை வழமைக்கு மாறாக காலி முகத்திடல் கடலில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சமுதுர கப்பலில் இருந்து பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளமை விஷேட அம்சமாகும்.

இதேவேளை சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பௌத்த, இந்து, கிரிஸ்தவ, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலங்களில் சமய வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம், ஸாதிக் ஷிஹான்

Thu, 02/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை