Header Ads

வன்முறைக்கு மத்தியிலும் மியன்மாரில் 5ஆவது நாளாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் இரப்பர் துப்பாக்கிச் சூடு மற்றும் தண்ணீர் பீச்சியடித்த நிலையிலும் யங்கோன் மற்றும் நிப்பிடோவ் நகரங்களில் ஐந்தாவது நாளாக நேற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பொலிஸாரின் நடவடிக்கையால் இரு ஆர்ப்பாட்டக்காரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்தும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டவும் கோரி மின் சக்தி அமைச்சின் பல ஊழியர்களும் நேற்று தமது தொழில் இடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

'இராணுவச் சதிப்புரட்சி தோல்வி அடைய வேண்டும்' என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.

மியன்மாரின் மிகப்பெரிய நகரான யங்கோனில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர். இராணுவத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலான ஆடைகளை இளம் பெண்கள் அணிந்திருந்தனர்.

இதேநேரம், கியா மாநிலத்தில் பல டஜன் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்திருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவர்கள் இராணுவத்தை எதிர்க்கும் மூன்று விரல் அடையாளத்தை உயர்த்திக் காண்பிப்பது அந்தப் படத்தில் தெரிகிறது. கெரன் மாநிலத்தின் மியாவாட்டி சிறு நகரில் உள்ள மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பலப்பிரயோகத்தை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா கண்டனத்தை வெளியிட்டுள்ளன. இராணுவ சதிப்புரட்சியை அடுத்து கைது செய்யப்பட்ட ஆளும் கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி மற்றும் ஏனைய மூத்த தலைவர்களை விடுவித்து நாட்டில் மீண்டும் சிவில் அரசாங்கத்தை கொண்டுவர ஆர்ப்பாட்டக்கார்கள் கோரி வருகின்றனர்.

“எமக்கு அமைதி காக்க முடியாது” என்று இளைஞர் தலைவர் ஒருவரான எஸ்தர் சே நவ் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். “எமது அமைதியான ஆர்ப்பாட்டங்களின்போது இரத்தம் சிந்தப்பட்டால், நாம் மேலும் அதிகமாக வந்து அவர்களிடம் இருந்து நாட்டை கைப்பற்றுவோம்” என்றும் குறிப்பிட்டார்.

சிவில் ஒத்துழையாமை போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நிப்பிடோவ் நகரில் நூற்றுக்கணக்கான அரச ஊழியர்கள் பேரணி நடத்தினர். இந்த இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக மருத்துவர்கள், ஆசிரியர்கள், ரயில் சேவை ஊழியர்கள் உட்பட அரச ஊழியர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். அண்மைய நாட்களில் நாடெங்கும் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மியன்மார் ஆளும் கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் தலைமையகத்தில் இராணுவம் சுற்றுவளைப்பு சோதனையில் ஈடுபட்டது.

'இரவு 9.30 மணி அளவில் புகுந்த இராணுவ சர்வாதிகாரிகள் தலைமையத்தில் சோதனை செய்ததோடு அதனை அழித்தனர்' என்று அந்தக் கட்சி தனது பேஸ்புக்கில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஆங் சான் சூச்சியின் இந்தக் கட்சி 2020 தேர்தலில் அமோக வெற்றியீட்டி, தனது இரண்டாவது தவணைக்கு ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

எனினும் இந்தத் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாகக் கூறியே இராணுவம் கடந்த வாரம் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

Thu, 02/11/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.