ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்திற்கு மூத்த குடியரசு கட்சியினர் இடையே ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக அவரது குடியரசுக் கட்சியின் முத்த உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளனர்.

அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி, கலகத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பிலேயே ட்ரம்ப் மீது அந்நாட்டு பாராளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியின் மூன்றாவது மூத்த உறுப்பினரான லிஸ் சென்னி இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான வாக்கெடுப்பு விரைவில் இடம்பெறவுள்ளது.

ஐந்து பேர் கொல்லப்பட்ட இந்த கலகம் தொடர்பில் பொறுப்பேற்க ட்ரம்ப் மறுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பில் சென்னி முதல் முறை கருத்துக் கூறியுள்ளார்.

இந்த வன்முறையை ட்ரம்பே தூண்டியதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனை ஒட்டியே அவர் மீது ஜனநாயகக் கட்சியினர் பதவி நீக்கத் தீர்மானத்தை கொண்டுவரவுள்ளனர்.

பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையை பெற்றிருக்கும் நிலையில், பதவிக் காலத்தில் இரு தடவைகளில் பதவி நீக்கத் தீர்மானத்திற்கு முகம்கொடுக்கும் முதலாவது ஜனாதிபதியாக ட்ரம்ப் இடம்பெறவுள்ளார். கடந்த 2019 டிசம்பரில் ட்ரம்புக்கு முதல் முறையாக பதவி நீக்க தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டபோதும் அது தோல்வி அடைந்தது.

இதன்படி ட்ரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் மேல் அவையான செனட் சபை அவர் மீது விசாரணை நடத்தும். அதில் குற்றங்காணப்பட மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவைப்படும். இது நிறைவேற்றப்பட குறைந்தது 17 குடியரசு கட்சி உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

இந்நிலையில் 20 வரையான குடியரசுக் கட்சியினர் ட்ரம்ப் மீது வெளிப்படையாக குற்றம்சாட்டி வருவதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. எனினும் இந்த விசாரணை நடத்தப்படும் கால எல்லை இன்னும் உறுதி செய்யப்படாதுள்ளது. வரும் ஜனவரி 20 ஆம் திகதி ட்ரம்ப் பதவியில் இருந்து வெளியேறி புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்கவுள்ளார்.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை 25ஆவது திருத்தச் சட்டத்தை பயன்படுத்தி ட்ரம்பை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றும்படி துணை ஜனாதிபதி மைப் பென்ஸுக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஒன்று பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 223 வாக்குகளும் எதிராக 205 வாக்குகளும் பதிவாகின.

எனினும் ஜனநாயகக் கட்சியினரின் இந்தத் தீர்மானத்தை நிராகரித்து பென்ஸ் ஏற்கனவே பிரநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசிக்கு கடிதம் எழுதியுள்ளார். “எமது அரசியலமைப்பின் கீழ், 25 ஆவது திருத்தச் சட்டம் என்பது தண்டிப்பது அல்லது அபகரிப்பது என்று அர்த்தம் கொள்ள முடியாது” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

உடல்நலம் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டுப் பணியாற்ற முடியாமல் போகும்போதுதான் அந்தச் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்றும் மைக் பென்ஸ் கூறியுள்ளார்.

Thu, 01/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை