கொரோனா இந்திய தடுப்பூசி வழங்கலில் இலங்கைக்கு முன்னுரிமை

- ஜனாதிபதி கோட்டாபயவிடம் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவிப்பு
- இலங்கை - இந்திய இருதரப்பு நட்புறவு குறித்தும் ஆராய்வு

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குமிடையிலான பேச்சுவார்த்தை நேற்றைய தினம் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதன் போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி உறுதிப்படுத்தப்பட்ட பின் அதனை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், ஏனைய நாடுகளுக்கும் மேற்படி தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் அதன்போது இலங்கைக்கு முன்னுரிமையளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கை- இந்திய இருதரப்பு நட்புறவின் பிரதிபலனை உச்சளவில் பயனுள்ளதாக பயன்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி மற்றும் இந்திய அமைச்சருக்கிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனுசரணையுடன் தற்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மேலதிகமாக ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பிலும் மேலும் சில துறைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், இயற்கை வாயு மின்சக்தி திட்டம், வீடமைப்பு மற்றும் வீதிகள் நிர்மாணிப்பு, விவசாய அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி, தொடர்பாடல் தொழில்நுட்பம், மாற்று மின் உற்பத்தியை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

முறைப்படி கல்வி கற்றுள்ள இளைஞர், யுவதிகள் இலங்கையில் அதிகமாக காணப்படுவதுடன் அவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் முறையான தொழிற் பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் தொழிற்பயிற்சி வேலைத்திட்டங்கள் தொடர்பில் உதவிகளை வழங்கத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சூரிய சக்தி மின்சார செய்யத் திட்டத்திற்கு தற்போது இந்தியாவின் நிதி உதவி கிடைத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் அந்த தொகைக்கு மேலும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இந்தியா பெற்றுக் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக பின்னடைவு கண்டுள்ள சுற்றுலாத்துறைக்கு மீண்டும் புத்துயிரளிப்பது தொடர்பான விடயங்களில் இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்தியாவில் சுற்றுலாத்துறை முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் தற்போது புதுடில்லியில் உள்ள அதிகப்படியான ஹோட்டல்கள் இந்திய உல்லாசப் பயணிகளால் நிறைந்து காணப்படுவதாகவும் அவர்களை இலங்கைக்கு பயணிப்பதற்கு ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள தீர்மானங்கள் சம்பந்தமாக இந்தியா, இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பேச்சுவார்த்தையில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர்களான அமித் தாரங்,ஷில்பக் அம்புலே, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 01/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை