ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம்

- தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற இலங்கை முன்னேற்றமும் செழிப்பும் அடையும்
- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் நேற்று தெரிவிப்பு 

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவேண்டும். 13ஆவது திருத்தம் உள்ளிட்ட அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வின் மீதான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் அவை சார்ந்துள்ளன. இதன் பயனாக இலங்கையின் முன்னேற்றமும் செழிப்பும் நிச்சயமாக மேன்மையடையுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிகார அமைச்சர் ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடனான சந்திப்புக்கு பின்னரான  கூட்டுச் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இரு நாடுகளும் கொவிட் -19 நோயிலிருந்து மேலெழும் கடுமையான மற்றும் பொதுவான சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன். அதே நேரத்தில், எம்மிடையிலான மிக நெருங்கிய ஒத்துழைப்பை மேலும் வலுவாக்குவதற்கு கொவிட்19 சந்தர்ப்பம் வழங்கியுள்ளது என்று நான் நினைக்கிறேன். அத்துடன் எமது அயலுறவுக்கு முதலிடம் கொள்கையை பிரதிபலிக்கும் வகையில், சரியான நேரத்தில் வழங்கப்பட்ட மருத்துவ உதவி மூலம் கொவிட் 19ஐ சமாளிக்க இலங்கைக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது.

மேலும் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகளை சொந்த நாட்டுக்கு அனுப்புவதில் இலங்கை அரசாங்கத்தின் உதவி மற்றும் ஏற்பாடுகளுக்காக எனது பாராட்டுகளையும் இந்த சந்தர்ப்பத்தில் பதிவு செய்ய வேண்டும். நாங்கள் இப்போது கொவிட்டுக்கு பின்னரான ஒத்துழைப்பு குறித்து நோக்குகின்றோம். அத்துடன் இந்தியாவிலிருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் இலங்கை வெளிக்காட்டிய ஆர்வத்தை இந்தியாவுக்கு எடுத்துச் செல்கிறேன்.

எங்கள் இருதரப்பு ஒத்துழைப்பானது கொவிட்19 காரணமாக முடங்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டில் உயர் மட்ட ரீதியிலான தொடர்புகள் பேணப்பட்டு அந்த உறவுகள் பலப்படுத்தப்பட்டன. அத்துடன் பிரதமர் மோடிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான மெய்நிகர் இருதரப்பு உச்சி மாநாடு 2020 ஆம் ஆண்டில் எமக்கு ஒரு முக்கியமான அடையாளமாக அமைந்தது.

முக்கியமான அரசியல் மற்றும் சமூகத்தலைவர்களுடனும் எமது பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் சந்திப்புக்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வர்த்தக துறையினருடனான சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நலன்கள், பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையுடனான உறவை மேலும் வலுவாக்குவதற்கு இந்தியா தயாராக இருக்கும் அதேநேரம் இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாகவும் சிறந்த பங்காளியாகவும் இந்தியா இருக்கும் என்பதே சகல தரப்பினருக்குமான செய்தியாகும்.

தற்போது , இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் கொவிட்டுக்கு பின்னரான மீட்சிக்கான உடனடி சவால்களை எதிர்கொள்கின்றன. இது ஒரு பொது சுகாதார பிரச்சினை மட்டுமல்ல, ஆனால் சம நேரத்தில் பொருளாதார நெருக்கடியாகவும் அமைகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, கொவிட்டினால் பாதிக்கப்படுபவர்களின் என்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டன என்பதுடன் தடுப்பூசி ஏற்றுவதற்கான வாய்ப்பு காணப்படுவதையும் நீங்கள் அறிவீர்கள். இந்திய பொருளாதாரமும் மீட்கப்படுவதற்கான வலுவான அறிகுறிகளைக் கடந்த சில மாதங்களில் காட்டியுள்ளது. அடுத்த காலாண்டில் இது முழுமையடையும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முன்னேற்றங்கள் இலங்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில், நிதி அல்லது வர்த்தகத் துறையில் மேலெழும் சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற நிலை காணப்படுகிறது. இருந்தாலும் குறிப்பிட்ட சவால்கள் தொடர்கின்றன.

Thu, 01/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை