ட்ரம்ப் பதவி பறிக்கப்பட வாய்ப்பு

- அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை: நால்வர் பலி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை அமைந்திருக்கும் கெப்பிட்டல் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டதோடு 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடியபோதே ஆர்ப்பாட்டம் மூண்டுள்ளது.

செனட் சபைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், ஜனாதிபதி தேர்தலில் டிரம்பே வென்றதாக முழக்கமிட்டார்.

துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உட்பட செனட் சபையில் கூடியிருந்த உறுப்பினர்கள் பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் சம்பவ இடத்திலிருந்து வெளியேறினர். பைடனின் வெற்றியை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்துவதை செனட் சபை தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

அமெரிக்க நேரப்படி கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த வன்முறைகளில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதோடு மற்றைய மூவரும் மருத்துவ அவசரநிலை காரணமாக உயிரிழந்திருப்பதாக வொசிங்டன் டி.சி பொலிஸ் தலைவர் ரொபர்ட் கொடீன் தெரிவித்துள்ளார்.

சில கலவரக்காரரர்கள் பக்கச் சுவற்றைப் பிடித்து ஏறிச் சென்று பாராளுமன்ற செனட் அவைக்குள் நுழைந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவைத் தலைவர் நான்சி பெலோசி அலுவலகத்திலும் கலவரக்காரர் ஒருவர் புகுந்ததைக் காட்டும் படம் வெளியாகியுள்ளது.

இதன்போது ட்ரம்ப் ஆதரவாளர்கள் கெப்பிட்டல் கட்டடத்தை பல மணி நேரம் ஆக்கிரமித்திருந்தனர். அவர்களுக்கு எதிராக சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் எரிச்சலூட்டக்கூடிய இரசாயனத்தை பயன்படுத்தியுள்ளனர். புதன்கிழமை மாலையாகும்போது அந்தக் கட்டடம் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெப்பிட்டல் கட்டடத்தின் தடையை உடைப்பதற்கு கும்பல் முயன்போது மறு பக்கத்தில் இருந்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த பெண் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அந்தக் கட்டடத்தில் இருந்து பொலிஸார் இரு குழாய் குண்டுகளை மீட்டுள்ளனர். இந்த வன்முறையை அடுத்து வொசிங்கடன் டி.சியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் இதனை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறி கண்டித்துள்ளனர்.

டிரம்பின் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

கலவரத்தை தொடர்ந்து தனது ஆதரவாளர்களைத் திரும்பிப் போகும்படி ட்ரம்ப் வேண்டுகோள் விடுக்கும் வீடியோவை பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அகற்றியுள்ளன. அந்த வீடியோவில் ஆதரவாளர்களை திரும்பிப் போகச் சொல்லும் அதே நேரம், அவர் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக ஆதாரமில்லாமல் மீண்டும் குற்றம்சாட்டினார்.

ட்விட்டர் சமூக ஊடகத் தளம் டிரம்பின் கணக்கை 12 மணி நேரத்திற்குத் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

ட்விட்டர், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்கள் டிரம்பின் கணக்குகளை அகற்றும்படி ஜனநாயகக் கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தினார்.

ஜனநாயகத்தைக் கீழறுக்கும் வகையில் ஆபத்தான பொய்த்தகவல்களைப் பரப்பி, ட்ரம்ப் வன்முறையைத் தூண்ட முற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பிராங்க் பலோன் ட்விட்டரில் பதிவிட்டார்.

அதற்கு டிரம்பின் மூன்று பதிவுகளை நீக்கிவிட்டதாக ட்விட்டர் பதில் அளித்தது.

பேஸ்புக் நிறுவனமும் டிரம்பின் வீடியோ செய்தியை அகற்றியது. அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் ஆயுதங்களுடன் கலந்துகொள்ளுமாறு, ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் பதிவை பேஸ்புக் நீக்கியது.

நிலைமையைக் கண்காணித்துவருவதாகவும், தேவை ஏற்பட்டால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பேஸ்புக் குறிப்பிட்டது.

முன்னாள் ஜனாதிபதியும் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான ஜோர்ஜ் புஷ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.

பைடனின் வெற்றி உறுதி

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதிசெய்யும் தேர்தல் சபை வாக்குகளை எண்ணும் பணியை வன்முறைக்கு பின்னர் செனட் சபை மீண்டும் ஆரம்பித்தது. இதில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடனும் துணை ஜனாதிபதியாக கமாலா ஹரிசும் வெற்றி பெற்றிருப்பதை இரு அவைகளும் உறுதி செய்தன.

அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்தில் சில மணி நேரம் நீடித்த குழப்பத்துக்குப் பின்னர் பலத்த பாதுகாப்புடன் அந்தப் பணி நடைபெற்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றக் கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்து சுமார் 4 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன்பாடி ஜோ பைடன் எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு முன், தேர்தல் சபையின் 538 வாக்குகளில் 12 மட்டுமே உறுதிசெய்யப்பட்டிருந்தன. இதற்கிடையே, ட்ரம்ப் மீது அரசியல் குற்றச்சாட்டை முன்வைக்கப்போவதாக ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகை முக்கியப் பிரமுகர்கள் சிலர் பதவி விலகியுள்ளனர்.

டிரம்புக்குப் பக்கபலமாய் இருந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ரொபட் ஒபிராயன் உட்பட சிலர் பதவி விலகுவது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

டிரம்பின் பதவி பறிபோகுமா?

தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் ட்ரம்ப் பேசி வந்ததால் தான் கலவரம் வெடித்ததாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அவரை பதவியில் இருந்து நீக்க அரசமைப்புச் சட்டத்தில் வழி இருப்பதாகவும், அதை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழ ஆரம்பித்துள்ளன.

அந்த சட்டப் பிரிவுக்கு 25ஆவது திருத்தம் என்று பெயர்.

டிரம்பின் அமைச்சரவைக்குள்ளேயே இந்த சட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து முனுமுனுப்புகள் தொடங்கியுள்ளன என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட அந்த 25 ஆவது திருத்தத்தின் படி, ஜனாதிபதிக்கு அவரது கடமையை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டால் அவரது பொறுப்புகள் வேறொருவருக்கு மாற்றப்படலாம்.

தற்போதைய நிலையில், முக்கிய அமைச்சரவை உறுப்பினர்கள், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், ஆகியோர், 'ட்ரம்ப் தகுதியோடு இல்லை என்பதால் மைக் பென்ஸ் செயல் தலைவர் ஆகிறார்’ என்று பாராளுமன்றத் தலைவர்களுக்கு கடிதம் எழுதியே இதைச் செய்ய வேண்டும்.

1967ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டதில் இருந்து இந்த சட்டத் திருத்தம் ஒரு முறைகூட பயன்படுத்தப்பட்டதில்லை.

வெர்மான்ட் மாநில குடியரசுக் கட்சி ஆளுநர், தேசிய உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் மைக் பென்சை சந்தித்து இந்தப் பிரிவை பயன்படுத்தும்படி கோரியுள்ளனர்.

 

Fri, 01/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை