பாராளுமன்றத்தில் அனுமதி பெறாது வர்த்தமானி அறிவித்தல்

ஒழுங்கு விதிகளுக்கு முரணானது − அதாவுல்லா எம்.பி

கொரோனாவினால் இறப்பவர்களை தகனம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படவில்லை. இது நாட்டின் சட்டத்திற்கும் பாராளுமன்ற ஒழுங்கு விதிகளுக்கு முரணானதென தேசிய காங்கிரஸ் தலைவரும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன் வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். நேற்று முன்தினமும் அவர் இதே பிரச்சினையை சபையில் முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருக்கிறார். இதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படவில்லை. இது நாட்டின் சட்டத்திற்கும் பாராளுமன்ற நடைமுறைகளுக்கும் முரணானதாகும். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இது எனது சிறப்புரிமை மீறல் ஆகும். இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால் இது தொடர்பில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு எனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றார்.

இதே சமயம் நேற்று முன்தினமும் இது பற்றி கருத்துத் தெரிவித்த அவர், கோவிட்19 தொற்றினால் மரணிப்பவர்களை தகனம் செய்வது தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி சட்டவிரோதமானதாகும்.

கொவிட்19 வைரஸ் தொடர்பில் ஆரம்பக் கட்டத்தில் யாருக்கும் தெளிவில்லாமல் இருந்த நிலையில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யாமல் தகனம் செய்யவேண்டுமென வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. இதனால் முஸ்லிம் மக்களே பாதிக்கப்பட்டனர். என்றாலும் தற்போது இந்த வைரஸ் தொடர்பில் வைத்தியர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். அதனால் கொவிட்19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதிக்கு முன்வைத்தோம். இது வைத்தியதுறையுடன் சம்பந்தப்பட்டதால் அரசியல் ரீதியில் இதற்கு முடிவெடுக்காமல், இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க தலைசிறந்த வைத்தியர் குழுவொன்று அமைக்கப்பட்டது. தற்போது அந்த வைத்தியர் குழு கொரோனா வைரஸ் நீரில் பரவுகின்றதா?, மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் பாதிப்பு ஏற்படுமா? என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது .

கொவிட் 19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் வைத்தியர் குழுவின் தீர்மானத்தின் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே அரசாங்கத்தின் முடிவாக இருந்தது. வைத்தியர்குழு கொவிட் 19 மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு தேவையான வழிகாட்டல் அடங்கிய பரிந்துரையை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்திருக்கின்றது.அதன் பிரகாரம் விரைவில் அடக்குவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவேண்டும்.

மரணிப்பவர்களை தகனம் செய்யவேண்டுமென தெரிவித்து வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானதாகும். மரணிப்பவர்களை அடக்கும் உரிமை அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கின்றது. அதனை மாற்றுவதாக இருந்தால் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமலே அந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. அதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

Fri, 01/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை