கட்டார் மீதான வளைகுடா நாடுகளின் முற்றுகை முடிவு

கட்டாருக்கு எதிரான அதன் வளைகுடா அண்டை நாடுகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுத்த தடையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் சவூதி அரேபியா கட்டாருடனான தரை மற்றும் கடல் எல்லைகளை மீண்டும் திறப்பதாக குவைட் தெரிவித்துள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு கௌன்சில் மாநாடு நேற்று சவூதி அரேபியாவில் ஆரம்பிக்கப்பட்டதை முன்னிட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டி மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கட்டார் மீது அண்டை நாடுகள் பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதித்தன.

சவூதி அரம்பித்த இந்தத் தடையில் ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் எகிப்து நாடுகளும் இணைந்தன.

மிகச்சிறியது என்றபோதும் அதிக செல்வந்த நாடாக இருக்கும் கட்டார் ஜிஹாத் போரோளிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த புதிய உடன்படிக்கை குறித்த அறிவிப்பை தொலைக்காட்சி மூலம் குவைட் வெளியுறவு அமைச்சர் அஹமது நாசர் அல் சபாஹ் வெளியிட்டார்.

இந்த வளைகுடா நாடுகளுக்கு இடையிலான முறுகலை தணிப்பதில் அண்மைக் காலத்தில் அமெரிக்கா நிர்வாகம் மத்தியஸ்த நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில் வளைகுடா மாநாட்டில் பங்கேற்பதற்கான சவூதி மன்னர் சல்மானின் அழைப்பை குவைட் எமீர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Wed, 01/06/2021 - 16:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை