கொவிட்-19 பூர்வீகத்தை கண்டறியும் சர்வதேச விசாரணைக்கு சீனா மறுப்பு

வூஹான் நகரில் தோன்றிய கொவிட்–19 தொற்றின் பூர்வீகத்தை விசாரணை செய்வதற்கான உலக சுகாதார அமைப்பின் குழு ஒன்றுக்கு நாட்டுக்குள் நுழைய சீனா அனுமதி மறுத்துள்ளது. இந்தக் குழுவின் இரு உறுப்பினர்கள் ஏற்கனவே சீனா பயணித்த நிலையில் அதில் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதோடு மற்றையவர் மூன்றாவது நாடொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

விசா அனுமதியை பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வுக் குழு நீண்ட காலம் காத்திருந்த நிலையில் சீனா வருவதற்கு அந்நாடு கடந்த டிசம்பர் மாதம் அனுமதி அளித்திருந்தது. இதற்காக உலக சுகாதார அமைப்பு சீனாவுடன் பல மாதங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பெருந்தொற்று 2019 பிற்பகுதியில் வூஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதோடு, அந்த நகரில் இருக்கும் சந்தை ஒன்றுடன் தொடர்புபட்டே இந்தத் தொற்று ஆரம்பத்தில் பரவியது.

சீனா அனுமதியை இன்னும் இறுதி செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார். “இரு உறுப்பினர்கள் ஏற்கனவே பயணித்ததோடு ஏனையவர்கள் தமது பயணத்தை ஆரம்பித்த நிலையில் இறுதி நேரத்தில் அது முடியாமல்போயுள்ளது” என்றார்.

“மிக விரைவில் இந்தக் குழுவை அனுப்புவதற்கு உள்ளக செயற்பாடுகளை சீனா விரைவுபடுத்தும் என்று எனக்கு உறுதி செய்யப்பட்டது” என்றும் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் கெப்ரியேசுஸ் தெரிவித்தார். இது தொடர்பில் சீன மூத்த அதிகாரிகளை தொடர்பு கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் விலங்குகளில் இருப்பது மற்றும் அது மனிதனுக்கு எவ்வாறு தொற்றியது என்பதை கண்டறிவதற்கு இந்த சர்வதேச குழு சீனா செல்ல பல மாதங்களாக முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணை 2021 ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் என்று அந்தக் குழு கடந்த டிசம்பரில் கூறியது.

வூஹான் நகரில் இருக்கும் விலங்கு இறைச்சிகளை விற்கும் சந்தை ஒன்றே இந்த வைரஸின் பூர்வீகம் என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது. இங்கு விலங்கிடம் இருந்து வைரஸ் மனிதனுக்கு தொற்றியிருக்கலாம் என்று கூறப்பட்டது. எனினும் இந்த வைரஸின் பூர்வீகம் தொடர்ந்தும் மர்மமாக உள்ளது. இந்த சந்தை வைரஸ் தொற்றிய இடமாக இருக்காது என்றும் அது தொற்றை பெருக்கி இருக்கக் கூடும் என்றும் தற்போது சில வல்லுநர்கள் கூறுகின்றனர். பல தசாப்தங்களாக வெளவ்வால்களில் அடையாளம் காணப்பாடமல் இருந்த நிலையில் அது மனிதனுக்கு தொற்றும் திறனை பெற்றிருக்கலாம் என்று மேலும் சில வல்லுநர்கள் நம்புகின்றனர். எனினும் வெளவ்வால் மற்றும் மனிதனுக்கு இடையே வைரஸை பரிமாற்றுவதற்கு காவியாக இருந்த விலங்கு எது என்பது பற்றி இதுவரை எதுவும் கண்டறியப்படாது உள்ளது.

Thu, 01/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை