ட்ரம்பை பதவி நீக்குவதற்கு தயாராகும் ஜனநாயக கட்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு முன்னர் அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கும் திட்டம் குறித்து பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுடன், சபாநாயகர் நான்சி பெலோசி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்படி ட்ரம்பின் ஜனாதிபதி அதிகாரத்தை அகற்றுவதற்கு துணை ஜனாதிபதி மைக் பென்ஸுக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஒன்றின் மீது பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தோல்வி அடைந்தால், பாராளுமன்ற கட்டடத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் ட்ரம்புக்கு எதிராக 'கிளர்ச்சியைத் தூண்டிய' குற்றச்சாட்டை ஜனநாயகக் கட்சியினர் சுமத்தவுள்ளனர்.

இது தொடர்பில் முதலாவது வாக்கெடுப்பு அமெரிக்க நேரப்படி நேற்று இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

25ஆவது திருத்தத்தின்படி ட்ரம்பை பதவி நீக்குவதற்கு துணை ஜனாதிபதி பென்ஸிடம் உத்தியோகபூர் கோரிக்கை விடுக்கும் தீர்மானத்திற்கான திட்டம் பற்றி பெலோசி, பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதினார்.

இந்த முன்னெடுப்பு மூலம் பென்ஸ் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதோடு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்படுவார்.

இந்த முயற்சியில் இது முதல் படி என்று பெலோசி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதிநிதிகள் சபை ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் என்று தெரிவித்துள்ளார்.

“எமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு நாம் அவசரமாக செயற்பட வேண்டி உள்ளது. ஏனென்றால் இந்த ஜனாதிபதி இரண்டுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளார்” என்று பெலோசி தெரிவித்துள்ளார்.

Tue, 01/12/2021 - 06:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை