கடலில் கறுப்பு பெட்டி இருக்கும் இடம் தெரிந்தது

62 பேருடன் கடலில் விழுந்த இந்தோனேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை கடற்படை சுழியோடிகள் நெருங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜகார்த்தாவின் பிரதான விமானநிலையத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை புறப்பட்ட விரைவிலேயே இந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் உயிர் தப்பியவர்கள் பற்றிய நம்பிக்கை குறைந்திருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கைக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ஜகார்த்தாவில் இருந்து 740 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் போர்னோ தீவில் பொன்டியானக்கை நோக்கி புறப்பட்ட போயிங் 737–500 என்ற இந்த விமானம் புறப்பட்டு நான்கு நிமிடங்களில் ராடர் திரையில் இருந்து காணாமல்போனது.

இந்நிலையில் விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கலாம் என்ற உறுதியான சந்தேகத்துடன் சுழியோடிகள் ஒரு குறுகலான பகுதியில் தேடுதலில் ஈடுபட்டு வருவதாக கடற்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லாங்கங்–லகி தீவுகளுக்கு இடையே உள்ள பகுதியில் கடலுக்கு அடியே 20 மீற்றர் ஆழத்தில் கறுப்பு பெட்டி இருப்பதாக நம்பப்படுகிறது.

அந்த இடத்தில் தான் விமானத்தின் முன்பாகம் உடைந்து விழுந்துள்ளது. கறுப்பு பெட்டிகளில் இருந்து தொடர்ந்து சமிக்ஞை வந்து கொண்டிருக்கிறது. எனவே அதை மீட்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.

இந்த விமான விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கறுப்பப் பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்கள் அதனை தெரிந்துகொள்ள உதவும் என்று நம்பப்படுகிறது.

அதேபோன்று விமானத்தில் இருந்தவர்களின் உடல்பாகங்கள் நேற்றும் மீட்கப்பட்டதாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீருக்கு அடியில் தெளிவாகப் பார்க்க முடிந்த 6 மீற்றர் ஆழத்தில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக முக்குளிப்பாளர் ஒருவர் கூறினார். அழுகிய உடல் எச்சங்களைக் கொண்டு, விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் புலனாய்வாளர்கள் மும்முரமாய் ஈடுபட்டுள்ளனர்.

Tue, 01/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை