வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையரது பிரச்சினைகளுக்கு தீர்வு

ஹோட்டல் கட்டணம் விரைவில் குறைக்கப்படும் என்கிறார் இராணுவ தளபதி

கொவிட்19 தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வரும் போது அவர்கள் முகங்கொடுத்த இரு பிரதான பிரச்சினைகளான விமான கட்டண அதிகரிப்பு மற்றும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுபவர்களின் கட்டண அதிகரிப்பு என்பவற்றுக்கு எதிர்வரும் ஓரிரு தினங்களில் தீர்வு வழங்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களுக்கு அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், இது வரையில் சுமார் 73,000 இலங்கையர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். தற்போது அவர்களை அழைத்து வருவதில் முறையான திட்டமிடலொன்று பின்பற்றப்படுகிறது. எனினும் கடந்த ஒன்றரை மாத காலமாக நாட்டில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால் வைத்தியசாலைகளில் நெரிசல் நிலை ஏற்பட்டது. இதனால் தனிமைப் படுத்தல் நிலையங்கள் பலவும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களாக மாற்றப்பட்டன.

இவற்றில் எவ்வித அறிகுறிகளும் இன்றி தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதனால் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்தது. இந்த சிக்கல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் இலங்கையரின் எண்ணிக்கை சற்று குறைவடைந்தது. எனினும் தற்போது அந்த நிலைமை சீராகியுள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இலங்கையரை அழைத்து வரும் செயற்பாடுகள் இரு வழிமுறைகளில் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கை அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விமானத்தில் வருபவர்கள் முப்படையினரால் அரச செலவில் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றமை ஒரு வழிமுறையாகும்.

அதனைத் தொடர்ந்து இந்த விமான கட்டணங்கள் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

ஹோட்டல் உரிமையாளர்கள் அதிக கட்டணத்தை அறவிடுவதாக முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து ஜனாதிபதி தலைமையில் ஹோட்டல் உரிமையாளர்களுடன் விசேட சந்திப்பொன்று கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

இதன் போது அதிகளவான கட்டணத்தை அறவிட வேண்டாமென்று கேட்டுக் கொண்டதோடு , 4 - 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் அதற்கு அடுத்த மட்டத்திலுள்ள ஹோட்டல்களில் அறவிடப்பட வேண்டிய கட்டணங்கள் தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கமைய எதிர்வரும் ஓரிரு தினங்களில் கட்டணங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

 

Tue, 01/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை