யுரேனியம் செறிவூட்டலை ஈரான் 20 வீதம் அதிகரிப்பு

உலக வல்லரசு நாடுகளுடன் 2015இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி ஈரான் யுரேனியத்தை 20 வீதம் செறிவூட்டும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. நிலத்தடி போர்டோவ் உலையில் இந்த செயற்பாடு கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக உலக அணுக் கண்காணிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியம் மின்சக்தியாகவும் பயன்படுத்த முடியும் என்றபோதும் அதனை கொண்டு அணு ஆயுதமும் தயாரிக்க முடியும். அணு ஆயுதம் தயாரிப்பதற்கு யுரேனியத்தை 90 வீதம் செறிவூட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அணு சக்தியைக் கொண்டு மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.

அமைதியான நோக்கிற்காகவே அணு செயற்பாட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஈரான், உலக நாடுகளுடனான ஒப்பந்தத்தில் பல நிபந்தனைகளுக்கும் இணங்கியது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் யுரேனியத்தைக் கிட்டத்தட்ட மூன்றரை வீதத்திற்கு மேல் செறிவூட்ட அனுமதி இல்லை. போர்டோவ் அணுவுலையில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை மேற்கொள்ளவும் ஈரானுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் அணுவாயுத நடவடிக்கைகள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள பல கட்டுப்பாடுகளை ஈரான் ஏற்கனவே மீறிவிட்டது.

அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் விலகியதற்குப் பதிலடியாக ஈரான் அவ்வாறு செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

Wed, 01/06/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை