தடுப்பூசியை பெற ஏழை நாடுகள் காத்திருக்க வேண்டிய நெருக்கடி

அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்புமருந்தை பெற தயார்நிலையில் உள்ள வேளையில், ஏழை நாடுகள் பல மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் நெருக்கடி உள்ளது.

உலகெங்கும் உள்ள நாடுகளுக்குத் தடுப்புமருந்து அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் உலக சுகாதார அமைப்பால் ‘கொவக்ஸ்’ திட்டம் உருவாக்கப்பட்டது. இருப்பினும், அது தற்போது 2 பில்லியன் அளவு தடுப்புமருந்துகளையே பெற்றுள்ளது. பணப் பற்றாக்குறையால் திட்டம், கூடுதல் தடுப்பு மருந்துகளைப் பெறும் ஒப்பந்தங்களில் ஈடுபட முடியவில்லை.

ஏழை நாடுகளுக்கும் வசதிபடைத்த நாடுகளுக்கும் இடையில் தடுப்புமருந்து நியாயமாகப் பகிரப்படும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே போவதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கொவக்ஸ் திட்டத்தின் மூலம் தடுப்புமருந்து பெறமுடியாமல் போகலாம் என்பதால் ஏழை நாடுகள் அதற்கான மாற்று வழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

அடுத்த ஆண்டு உற்பத்தியாகவிருக்கும் 12 பில்லியன் தடுப்புமருந்துகளில் வசதிபடைத்த நாடுகள் 9 பில்லியன் தடுப்புமருந்துகளுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டன. இதில் சில நாடுகள் மிதமிஞ்சிய அளவில் தடுப்பு மருந்துகளை பெற முன்பதிவு செய்துள்ளன. கொவக்ஸ் திட்டத்தில் போதுமான தடுப்புமருந்துகள் இல்லை என்பதால், ஏழை மக்கள் அதற்காக நீண்ட நாள் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என உலகப் பொருளாதார மன்றத்தின் சுகாதாரப் பிரிவுத் தலைவர் குறிப்பிட்டார்.

ஏழை நாடுகளுக்காக கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதற்கு அறிவுசார் சொத்துரிமை ஒழுங்குமுறையில் சில விட்டுக்கொடுப்புகளை செய்யும்படி உலக வர்த்தக நிறுவனத்தை தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளன. ஆனால் செல்வந்த நாடுகள் அதனைச் செய்ய தயக்கம் காட்டி வருகின்றன.

Thu, 12/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை