கொரோனா மரணங்களை தகனம் செய்வது அரசின் தீர்மானமல்ல

பாராளுமன்றத்தில் ஹலீம் M.Pயின் உரைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பதில்

தகனம் செய்வதில் பிடிவாதமாக இருப்பது ஒரு இனத்தை பழி தீர்க்கவா என சந்தேகம்!

தொழில்நுட்ப குழுவின் தீர்மானத்தில் அரசோ அமைச்சரவையோ தலையிடுவதில்லை

கொரோனா தொற்றில் மரணிப்பவர்களை தகனம் செய்வது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல. தொழிநுட்பகுழுவின் தீர்மானத்தை மீறி அரசோ அமைச்சரவையோ செயற்பட முடியாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொரோனாவில் மரணிப்பவர்களின் இறுதிக் கிரியை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப குழுவுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கும் அரசாங்கத்துக்கும் அமைச்சரவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

குறித்த தொழிநுட்ப குழு எடுக்கும் தீர்மானத்தையே அரசாங்கம் பின்பற்றுகின்றது. அதனை மீறி அரசாங்கத்துக்கு தீர்மானிக்க முடியாது என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் சுற்றாடல், வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு

அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி எச்.எம்.ஏ. ஹலீமின் கேள்விக்கு பதளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய ஹலீம் எம்.பி,....

மரணிப்பவர்களின் உடலில் இருக்கும் வைரஸ் நீரில் பரவி சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவ்வாறு இருந்தும் தொழில்நுட்குழு எந்த அடிப்படையில் கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய நிராகரிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்த வேண்டும். சடலம் மண்ணுடன் கலந்து, அதனால் வைரஸ் நீருடன் கலந்துவிடும் என்ற அவர்களின் தீர்மானத்துக்கு எந்த அடிப்படையும் இல்லை.

மரணித்தவர்களின் உடலில் இருக்கும் வைரஸ் ஒருபோதும் நீருடன் கலந்து பரவுவதில்லை என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்த வைத்தியர் நிஹால் அபேசிங்க உறுதியாக தெரிவித்திருக்கின்றார். அதேபோன்று பல வைத்தியர்கள் இது தொடர்பாக பகிரங்கமாக தெரிவிக்கும் நிலையில், இந்த விசேட தொழில்நுட்ப குழு மாத்திரமே அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது.

உலக சுகாதார அமைப்பின் தீர்மானத்தையும் தாண்டி, தொழிநுட்ப குழு இந்த விடயத்தில் இந்தளவு பிடிவாதமாக இருப்பது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இது ஒரு இனத்தை பழி தீர்ப்பதற்காக செய்கின்றதா என எண்ணத்தோன்றுகின்றது என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,..

கொரோனாவில் மரணிப்பவர்களின் இறுதிக் கிரியை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப குழுவுக்கே வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கும் அரசாங்கத்துக்கும் அமைச்சரவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் அரசாங்கம் தலையிடுவதில்லை என்றார்.

 

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 12/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை