கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வது தொடர்பில் சாதக சூழல்

பிரதமர் மற்றும் பசிலுடனான முஸ்லிம் எம்.பிக்களின் பேச்சில் திருப்தி

கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை புதைப்பது தொடர்பில் அரசாங்கத்திலுள்ள முக்கிய தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமைந்துள்ளதாக ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தெரிவித்தனர்.

ஏற்கெனவே ஆளும் தரப்பு எம்.பிகள், நிபுணர்குழு உட்பட பலருடன் பேச்சு நடந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு நம்பிக்கை தரும் வகையில் சாதகமான நடந்ததாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இஷாக் ரஹ்மான்,எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் தினகரனுக்கு தெரிவித்தனர்.நிலத்தடி நீர் அற்ற வரண்ட பகுதியை அடையாளங் காண்பது குறித்தும் தொழில்நுட்ப குழுவிற்கு துறைசார் நிபுணர்களை புதிதாக நியமிப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பில் சாதகமான முடிவு எட்டப்பட்டதாகவும் அறிய வருகிறது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இஷாக் ரஹ்மான் எம்.பி,

பிரதமருடனும் மேலும் முக்கிய தலைவர்களுடனும் கடந்த இரு தினங்களில் நடத்திய பேச்சுக்கள் சாதகமாக அமைந்தன.

இன்னும் சந்திப்புகள் இடம்பெற இருப்பதோடு முஸ்லிம்களுக்கு நிம்மதி அளிக்கும் தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

அண்மைய முன்னெடுப்புகள் சாதகமாக நம்பிக்கை தரும்வகையில் அமைந்ததாக முஷாரப் எம்.பி தெரிவித்தார்.

தமிழ் சமூகம் முகங்கொடுத்தது போன்ற பிரச்சினையை தான் இன்று முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ளனர்.இது பேசி காலங்கடத்தும் விடயமல்ல.பாராளும்னறத்தில் சகல கட்சியை சேர்ந்தவர்களும் கோரிக்கை முன்வைத்தார்கள்.அதிகாரிகளில் இனவாதிகள் உள்ளனர்.

இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய காங்கிரஸ் தலைவர் எம்.எல்.ஏ.எம்.அதாவுல்லா எம்.பி,

எமது தொடர் முயற்சிகளுக்கும் நமது உம்மத்துக்களின் நியாயமான பிராத்தனைகளுக்கும்,பலன் கிடைக்க சமிக்ஞைகள் கிடைத்துள்ளது.உணர்சிகளுக்கு அடிமையாகி காரியம் கைகூடாமல் போன கடந்த கால அனுபவங்களை கற்றுத்தந்த பாடங்களாக மனதில் நிறுத்துவது அவசர தேவையுமாக உள்ளது.குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள ​வேண்டும்.எம் எல்லோரின் எண்ணங்களையும் நிறைவேற்ற தொடர்ந்தும் பிரார்த்திக்குமாறும் அவர் கோரியுள்ளார்.முஸ்லிம் எம்.பிகள் குழு நேற்று பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவை நேற்று சந்தித்ததாகவும் அறிய வருகிறது.(பா)

ஷம்ஸ் பாஹிம்

Sat, 12/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை