மீள்குடியேற்ற அமைச்சு இல்லாமற் போனது கவலை

சபையில் சித்தார்த்தன் எம்.பி

 

25 வருடங்களாக இருந்து வந்த மீள்குடியேற்ற அமைச்சு இம்முறை இல்லை. அதனால் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சித்தார்த்தன் தெரிவித்தார்.

இந்த அமைச்சு வேறு அமைச்சுக்களுடனும் இணைக்கப்படவில்லை என்று கூறிய அவர் இன்னும் அதிமான குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவேண்டி இருப்பதாகவும் வரவு, செலவுத் திட்டத்தினூடாக வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

2021 வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் வீதி அபிவிருத்தி வேலைகளே வடக்கில் இடம்பெறுகின்றன. கோப்பாய் பிரதேச சபைக்கு கீழ் இருக்கும் அம்மன் வீதி, இதனை அமைப்பதற்காக வீதி அதிகார சபையினூடாக அரசாங்கம் அடிக்கல் நாட்டியிருந்தது. அத்துடன் பெயர் பலகை ஒன்றையும் வைத்திருந்தார்கள். குறித்த வீதி பிரதேச சபைக்கு சொந்தமானது. அதன் அனுமதியை பிரதேச சபையிடம் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில் பெயர் பலகையை பிரதேச சபை நீக்கியது. அது பாரிய பிரச்சினையாக மாறி பிரதேச சபை தலைவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது மத்திய அரசாங்கம் பிரதேச சபையின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும். கடந்த அரசாங்கம் கம்பெரலிய வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும்போது பிரதேச சபைகள் ஊடாகவே அதனை முன்னெடுத்தது.

இம்முறை மீள்குடியேற்றத்திற்கு அமைச்சு நியமிக்கப்படவில்லை. ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு வந்து வாழ விரும்பம் தெரிவித்திருக்கின்றபோதும், அந்த வசதிகள் கிடையாது.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

Fri, 12/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை