மனித உரிமைகள் தினத்தில் தமது உறவுகளைத் தேடி காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் நேற்று ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக்கோரி, வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10.30 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,..

போர்முடிவுற்று 10 வருடங்கள் கடந்த பின்னரும் கூட இந்த நாட்டில் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளது. அத்துடன் எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்றுவரை நீதி கிடைக்கபெறவில்லை.

மக்களின் உரிமைகள் மீறப்பட்ட இந்த நாட்டில் மனித உரிமைகள் ஆணையம் எதற்காக செயற்படுகின்றது என்று தெரியவில்லை. எமது சிறுவர்கள்,பெண்கள், கடத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை தெரியவில்லை.

இந்த சம்பவங்கள் சிங்கள மக்களுக்கு மாத்திரமே நாடும் அவர்களுக்காகவே இந்த அரசாங்கமும் என்ற நிலையே தற்போது காணப்படுகின்றது. சுதந்திரமாக நடப்பதற்கு கூட எமக்கு உரிமை இல்லாத நிலை உள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 'கையில் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே', 'மறுக்காதே மறுக்காதே எமது உரிமைகளை மறுக்காதே', 'அரசின் பொறுப்பற்ற பதிலை கண்டிக்கிறோம்' என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

Fri, 12/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை