உலகெங்கும் வேகமாகப் பரவும் புதிய கொரோனா வைரஸ் திரிபு

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபு உலகெங்கும் தொடர்ந்தும் வேகமாக பரவி வருகிறது.

அனைத்து வைரஸ்களும் மரபு மாற்றங்களை பெற்று பரவுவது போன்றே கொவிட்–19 தொற்று திரிபுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு மாதத்திற்கு வைரஸ்கள் ஒன்று அல்லது இரண்டு மரபு மாற்றங்களுக்கு உட்படுவதாக நம்பப்படுகிறது.

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் திரிபு 14 மாற்றங்களுக்கு உட்பட்டு புரதத் தொகுதியில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதோடு மரபணு குறியீட்டின் மூன்று நீக்கங்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அந்த வைரஸ் வேகமாக பரவும் திறனை பெற்றிருப்பது விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டபோதும் உயிராபத்து அதிகம் எற்பதற்கு ஆதரங்கள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வைரஸின் புதிய திரிபு இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து திரும்பிய 6 பேரிடமே இந்த வைரஸ் திரிபு இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் பயணம் செய்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் மும்முரமாய் இறங்கியுள்ளனர்.

இந்த புதிய வைரஸ் திரிபு தற்போது 20 நாடுகள் மற்றும் ஆட்புலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உட்பட 12 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் தற்போது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மற்றுமொரு வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Wed, 12/30/2020 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை