சவூதி பெண் செயற்பாட்டாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை

சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு உரிமை கோரி பிரசாரம் செய்த முன்னணி பெண் செயற்பாட்டாளர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடுங்காவலில் இருக்கும் 31 வயதான லுஜைன் அல் ஹத்லுல் என்பவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

“தம்மை தீவிரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டதன் காரணமாக தீர்ப்பைப் பார்த்து அவர் அழுதார்” என்று அவரது சகோதரர் வலீத் அல் ஹத்லுல் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். “சவூதி நீதித் துறை மீது எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லாதபோதும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக நாம் மேன்முறையீடு செய்வோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சவூதி அரேபியாவுக்கு விரோதமான அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தது உட்பட குற்றச்சாட்டுகளில் 2018 ஆம் ஆண்டு அவர் உட்பட மேலும் சில செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவரை விடுதலை செய்யும்படி சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் தொடர்ச்சியாகக் கோரி வந்தன.

எனினும் பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் ஹத்லுல் கடந்த திங்கட்கிழமை குற்றங்காணப்பட்டார். இதில் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க முயன்றது மற்றும் வெளிநாட்டு திட்டங்களை செயற்படுத்திய குற்றங்களும் உள்ளடங்கும். இதன்படி அவருக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் இரண்டு ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

ஹத்லுல் போராடி வந்த பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு சவூதி அனுமதிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னரே அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 12/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை