லத்தீன் அமெரிக்க நாடுகளில் தடுப்புமருந்து திட்டம் ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்றில் மோசமாக பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றான லத்தீன் அமெரிக்காவில் முதல் நாடாக மெக்சிகோவில் தடுப்பு மருந்து வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. அந்நாட்டின் தாதி ஒருவர் முதலாமவராக தடுப்பு மருந்தை போட்டுக்கொண்டார்.

மெக்சியோவுக்கு முதல் தொகுதியாக 3,000 பைசர்–பயோஎன்டெக தடுப்பு மருந்துகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்நாடு மொத்த 34 மில்லியன் அளவு தடுப்பு மருந்தை கொள்வனவு செய்துள்ளது.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அடுத்து உலகில் கொரோனா தொற்றினால் அதிக உயிரிழப்பு நேர்ந்த நாடாக மெக்சிகோ உள்ளது.

இதனைத் தொடர்ந்து சிலி மற்றும் கொஸ்டாரிகா நாடுகளிலும் பைசர் தடுப்பு மருந்து வழங்கும் பணி கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது.

ஆர்ஜன்டீனாவும் ஒரு சில நாட்களில் தடுப்பு மருந்து வழங்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளது. அந்த நாடு ரஷ்ய உற்பத்தியான ஸ்புட்னிக் வீ தடுப்பு மருந்தை முதல் கட்டமாக பெற்றுள்ளது. இதன் 300,000 அளவு தடுப்பு மருந்து கடந்த வியாழக்கிழமை தலைநகர் புர்னோஸ் ஏயார்ஸை வந்தடைந்தது.

பிராந்தியத்தில் நோய்த் தொற்றினால் அதிக உயிரிழப்பு பதிவான நாடான பிரேசிலில் அண்மைய தினங்களில் மீண்டும் வைரஸ் தொற்று வேகம் அதிகரித்தபோதும் வரும் பெப்ரவரி வரை தடுப்பு மருந்து வழங்கும் வாய்ப்பு இல்லாதுள்ளது.

தாம் தடுப்பு மருந்தை போட்டுக்கொள்ள திட்டமிடவில்லை என்று பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளானதால் தமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைத்திருப்பதாக அவர் நம்புகிறார்.

Sat, 12/26/2020 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை