மட்டு. சந்திவெளி பாலயடித்தோணா மினி சூறாவளியில் 65 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு - சந்திவெளி பாலயடித்தோணா பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு வீசிய மினி சூறாவளியினால் நட்புறவுக் கிராமத்திலுள்ள அறுபத்தைந்து வீடுகள் சேதடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இவ்வீடுகளை முழுமையாக புனரமைப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் முதற்கட்டமாக ஒவ்வொரு வீட்டிற்கும் தலா பத்தாயிரம் ரூபா நிதி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின்போது சுமார் 9 மணிமுதல் 15 நிமிட நேரம் பாலயடித்தோணா பிரதேசத்தில் கடும் காற்று வீசியதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது வீடுகள் மற்றும் வேலிகள் சேதமடைந்துள்ளன.

கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, கிராம சேவை அதிகாரி மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்களும் இப்பிரதேசத்திற்கு வருகைதந்து சேதவிபரங்களை பார்வையிட்டனர்.

இதையடுத்து மாவட்ட செயலகத்தினூடாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க சேதமடைந்த வீடுகளை முழுமையாகப் புனரமைக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக தலா பத்தாயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.

இதற்கமைவாக பிரதேச தொழில்நுட்ப உத்தியோகத்தர் மூலமாக மதிப்பீட்டுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் நிருபர்

Wed, 12/30/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை