தனியார் மருத்துவமனைகளில் கொவிட் 19 நோய்க்கு சிகிச்சை

இராணுவத் தளபதியுடன் மருத்துவ நிபுணர்கள் ஆராய்வு

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் விரும்பினால் அவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு மருத்துவ நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பான தேசிய செயலகத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கும் மருத்துவ நிபுணர்களுக்கு மிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே மருத்துவ நிபுணர்கள் இராணுவத்தளபதியிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு வைரஸ் தொற்று நோயாளர்கள் விருப்பம் தெரிவித்தால் அதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர்கள் இ ராணுவத் தளபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதன் மூலம் வைரஸ் தொற்று சிகிச்சை மத்திய நிலையங்களில் காணப்படும் நெருக்கடிகளை குறைக்க முடியும் என்றும் அவ்வாறு இடம்பெறும் போது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர்கள் எடுத்துக்கூறினர்.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வைரஸ் ஒழிப்பு செயற்பாட்டு செயலணி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தி உரிய தீர்மானத்தை மேற்கொள்வதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேற்படி சந்திப்பில் விசேட மருத்துவ நிபுணர் மய்யா குணசேகர, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹல, பேராசிரியர் பிரசாத் கடுலந்த மற்றும் விசேட மருத்துவ நிபுணர் டாக்டர் எரங்க நாரங்கொட ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 12/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை