புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கு தயார்

சிறிதரன் எம்.பியின் கோரிக்கைக்கு அமைச்சர் விமல் சாதகமான பதில்

ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனத்தை சுவீகரிக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் அது சார்ந்த அபிவிருத்தி பணிகளை உப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் ஆரம்பிக்க இருக்கிறோம். வாழைச்சேனை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒட்டுசுட்டான் பணி கொரோனாவினால் பிற்போடப்பட்டது. பரந்தன் இரசாயன கைத்தொழில் பேட்டை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் எஸ்.ஸ்ரீதரனின் கேள்விக்கு பதிளிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களும் தொழிலதிபர்களும் இங்கு வந்து முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கான நம்பிக்கை குறைவாக உள்ளதால் அவர்களை கவர்ந்து உள்ளீர்க்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள ஆரம்பிக்குமாறும் கைத்தொழில் வலயமொன்றை உருவாக்க வேண்டுமெனவும் அவர் கோரினார்.

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீதரன் எம்.பி,

4,000 பேர் வேலை செய்த வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையில் இன்று 50 பேர் தான் பணியாற்றுகின்றனர். ஆணையிறவு உப்பளம் வெள்ளையுப்புக்கு உலகளவில் பிரபலமானது.அங்கு கண்ணிவெடிகள் அகற்றப்படாததால் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முடியவில்லையெனக் கூறப்படுகிறது.வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழங்க இவற்றை இயக்க வேண்டும்.முன்பு அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கில் இயங்கிய பல கூட்டுத்தாபனங்கள் இன்று மூடப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து கூட தொழிலதிபர்கள் வந்து இடங்களை பார்வையிட்டனர். காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையை வேறு இடத்தில் ஆரம்பிக்க முடியும். 400 ஏக்கர் கொண்ட விவசாயப் பண்ணை மூடப்பட்டுள்ளது. ஆணையிறவு உப்புக் கூட்டுத்தாபனத்தில் திறந்த அடிப்படையில் தொழிலாளர்கள் உள்ளீர்க்கப்படுவதில்லை என்றார்.

அவரின் கோரிக்கை தொடர்பில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தொடர்ந்து பதிலளித்தார்.

ஆணையிறவு உப்புக் கூட்டுத்தாபனத்தை சுவீகரிக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் அது சார்ந்த அபிவிருத்தி பணிகளை உப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் ஆரம்பிக்க இருக்கிறோம். வாழைச்சேனை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒட்டுசுட்டாண் பணி கொரோனாவினால் பின்போடப்பட்டது. பரந்தன் இரசாயன கைத்தொழில் பேட்டை ஆரம்பிக்கப்படும்.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை அண்டியதாக தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கே தொழில் வழங்கப்பட்டது. விரைவில் ஆரம்பிக்கப்படும். உங்கள் பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு தான் தொழில் வாய்ப்பு வழங்கப்படும்.

பரந்தன் மக்களுக்கோ பிரதேசத்திற்கோ பாதிப்பு ஏற்படும் தொழிற்சாலைகளை முன்னெடுக்க மாட்டோம். சூழல் அறிக்கை பெற்றே பணிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

ஸ்ரீதரன் எம்.பி கூறுகையில்,

இப்பகுதிகளில் கைத்தொழில் வலயங்களை ஆரம்பித்தால் 20 ற்கும் மேற்பட்ட தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கலாம். குறிஞ்சாத்தீவு உப்பளத்தை தனியார் கைக்கு செல்லாமல் அரச சொத்தாக முன்னெடுக்க வேண்டும்.புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் இங்கு வந்து முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள். வேலையில்லாப் பிரச்சினையை நீக்க தமிழ் தொழிலதிபர்கள் கூட இங்கு முதலிட தயாராக இருக்கிறார்கள்.

அவர்களுக்கான நம்பிக்கை குறைவாக உள்ளது.இங்கு வந்து முதலீடு செய்வதற்கு அச்சப்படுகின்றனர். அவர்களை கவரக்கூடிய வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

 

 

Sat, 12/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை