ஆளுந்தரப்பு தமிழ் உறுப்பினர்கள் இன்று நீதியமைச்சரை சந்தித்து பேச முடிவு

SLPP ஊடக சந்திப்பில் அங்கஜன், வியாழேந்திரன் கூட்டாக தெரிவிப்பு

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆளும் தரப்பிலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று நீதி அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேச உள்ளனர்.

தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பாக பொறிமுறையொன்றை அமைக்குமாறு அமைச்சரை கோரவுள்ளதாக குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் இவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இங்கு உரையாற்றிய குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன்,

கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஊன்றுகோளாக இந்த வரவு செலவுத் திட்டம் அமையும்.நடைமுறைச்சாத்தியமான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன் விவசாயத்துறைக்கு அதிக வரிக்குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.

பலாலி விமானம்நிலையம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர்,

பலாலி விமான நிலையம் மூடப்படுவதாக கூறப்படும் விடயம் குறித்து சுற்றுலா அமைச்சின் மேற்பார்வை குழுவில் வினவினோம்.அதனை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.அங்கு பணிபுரிந்தோர் தற்காலிகமான மத்தளைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதனை விஸ்தரிக்க இந்தியா உதவ உள்ளது.பலாவி விமான நிலையம் தொடர்ந்து இயங்கும். அரசியல் தலையீடுகளின்றி மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர்,

நீண்டகாலமாக அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.இந்த அரசாங்கத்திற்கும் நாம் இது தொடர்பில் கோரிக்கை முன்வைத்து வருகிறோம். அரசியல் கைதிகளின் குடும்பங்கள் படும் வேதனை எமக்கு நன்கு தெரியும். அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் ஆளும் தரப்பிலுள்ள எம்.பிகள் நீதி அமைச்சர் அலி சப்ரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.அவர்களது விடுதலை தொடர்பில் பொறிமுறையொன்றை உருவாக்குமாறு கோரியுள்ளோம். இன்று சனிக்கிழமை ஆளும் தரப்பிலுள்ள சகல தமிழ் எம்.பிக்களும் அவரை சந்திக்க இருக்கிறோம். பொறிமுறை அமைத்து நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு தருமாறு கோருகிறோம் என்றார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி வழங்கி வாக்குறுதிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அரசில் வழங்கிய வாக்குறுதிகள் நடைமுறைக்கு வரவில்லை.ஏப்ரல் 21 தாக்குதல், கொரேனா தாக்கம் என்பவற்றினால் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வன இலாகா,வனஜீவராசிகள் திணைக்களம்,தொல்பொருள் திணைக்களம்,மகாவலி அதிகார சபை என்பன பொதுமக்களின் காணிகளை உள்ளடக்கி எல்லை கற்களை இட்டு வருவதால் பிரச்சினை எழுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புடன் பேசி வருகிறோம்.அரசியல் கைதிகள் விடயம் குறித்தும் பேசி வருகிறோம்.நாம் கண்மூடிக் கொண்டிருக்கவில்லை.

அரசியல் கைதிகள் தொடர்பில் பேசிய அவர்,

அரசியல் கைதிகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட கைதிகள் உள்ளனர்.வழக்கு நடைபெறும் வழக்கு எடுபடாத கைதிகள் உள்ளனர். சனிக்கிழமை நீதி அமைச்சரை சந்திக்கிறோம். இது தொடர்பில் பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் துரிதமாக விடுதலை செய்வது தொடர்பில் ஆராய இருக்கிறோம். அடுத்து இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கு துரிதமாக தீர்வு காண முயற்சி செய்தோம். 51 நாள் அரசிலும் இது தொடர்பில் முயற்சி செய்தோம். கைதிகள் நீண்டகாலமாக சிறைகளில் உள்ளனர். ஏற்கெனவே ஜனாதிபதியுடன் பேசியுள்ளோம். விடுதலையை விரைவு படுத்துவது குறித்து பேசி இருக்கிறோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

 

 

Sat, 12/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை