எத்தியோப்பியாவில் மோதல் முற்றுகிறது: எரிட்ரியா மீதும் ரொக்கெட் தாக்குதல்கள்

எத்தியோப்பியாவின் பதற்றம் கொண்ட டைக்ரே பிராந்தியத்தில் இருந்து எல்லை கடந்து எரிட்ரிய தலைநகர் மீது ரொக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தலைநகர் அஸ்மராவின் புறநகர் பகுதிகளில் பல ரொக்கெட் குண்டுகள் விழுத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இதனால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிர்ச்சேதங்கள் பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

டைக்ரே பிராந்திய ஆளும் கட்சியே அந்நாட்டு மத்திய அரசுடன் மோதலில் சிக்கியுள்ளது. அந்தக் கட்சியின் படைகள் எத்தியோப்பியாவின் மற்றொரு பிராந்தியத்தின் மீதும் முன்னதாக ரொக்கெட் தாக்குதல் நடத்தி இருந்தது.

அம்ஹாரா பிராந்தியத்தின் இரண்டு தளங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டிருப்பதோடு மேலும் தாக்குதல் நடத்துவதாகவும் எச்சரித்துள்ளது.

எத்தியோப்பியாவில் 2018 ஆம் ஆண்டு அபியி அஹமது பிரதமராக பதவிக்கு வந்த பின்னர் அந்நாட்டில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அண்டை நாடான எரிட்ரியாவுடன் அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டியதால் அவர் கடந்த ஆண்டு நோபல் பரிசையும் வென்றார்.

எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியா இடையே இரண்டு தசாப்தங்கள் மோதல் நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் சீர்திருத்தங்களால் அந்நாட்டு அரசியலில் செல்வாக்கு மிக்க டைக்ரேயன்கள் ஒதுக்கப்பட்டனர். இந்நிலையில் அந்தப் பிராந்திய அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அண்மைய வாரங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. டைக்ரே பிராந்தியத்தின் இந்த மோதல் சூடானையும் பாதித்துள்ளது. இதனால் எல்லை கடந்து 17,000க்கும் அதிகமான பொதுமக்கள் சூடானில் அடைக்கலம் பெற்றிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக எரிட்ரிய தலைநகர் அஸ்மாராவின் மக்கள் தெரிவிக்கின்றனர்.

‘எங்களுக்கு கிடைக்கிற தகவல்களின்படி அஸ்மாராவின் விமான நிலையத்துக்கு அருகிலேயே பல ரொக்கெட்டுகள் விழுந்துள்ளன’ என்று பெயர் வெளியிட விரும்பாத இராஜாங்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாக ஏ.எப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

டைக்ரே பிராந்தியத்தில் இருந்து வீசப்பட்ட இரு ரொக்கெட்டுகள் அஸ்மாரா விமான நிலையத்தின் மீது விழாமல் குறி தவறி புறநகர்ப் பகுதியில் விழுந்ததாக எரிட்ரியாவின் அரசு ஊடகமான டெப்சா ட்வீட் செய்துள்ளது.

எத்தியோப்பியாவின் அரசுப் படைகளுக்கு உதவி செய்வதற்காக எரிட்ரியாவின் படையினர் எல்லை தாண்டி வருவதால் அந்த நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என்று முன்னதாக டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.

எரிட்ரிய அரசு தங்களுக்கு அந்தப் போரில் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுகிறது. ஆனால், எல்லை நெடுக நடக்கும் சண்டையும், எரிட்ரியாவின் மருத்துவமனைகளில் சிப்பாய்களுக்கு சிகிச்சை நடப்பதும், எரிட்ரிய அரசு கூறுவதில் உண்மை இல்லை என்று காட்டுவதாக அங்கிருத்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி நவம்பர் 4ஆம் திகதி ஒரு இராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு எல்லையைக் கடந்துவிட்டது என்றும் கூறி அதன் மீது இராணுவ நடவடிக்கைக்கு அபியி அகமது உத்தரவிட்டார். ஆனால், அந்த இராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.

டைக்ரே துருப்புகளுக்கு அனுபவம் அதிகம். மலைப்பாங்கான நிலப்பகுதியை அவர்கள் நன்கு அறிவர். இதனால் நீண்ட காலம் நீடிக்கும் பிராந்திய சண்டை நடக்கலாம் என்றும், எத்தியோப்பியா மற்றும் ஆபிரிக்காவின் கொம்புப் பகுதியில் உள்ள மக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது.

Mon, 11/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை