அணு விஞ்ஞானி படுகொலை: பழிதீர்க்க ஈரான் உறுதி

ஈரானின் முன்னணி அணு விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கப்படும் என்று அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி கமனெய் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவிக் காலம் முடிவுக்கு வரும் தருணத்தில் இந்த சம்பவம் மேற்குலகம் மற்றும் இஸ்ரேலுடனான மோதலை வலுக்கச் செய்துள்ளது.

ஈரான் அணு ஆயுதத் திட்டத்தின் கட்டமைப்பாளராக இஸ்ரேல் மற்றும் மேற்குலக அரசுகள் நம்பும் மொசன் பக்ரிசதாஹ்வின் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று கமனெய் கடந்த சனிக்கிழமை உறுதி அளித்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பில் இஸ்ரேல் மீது ஈரான் ஜனாதிபதி கடும் குற்றச்சாட்டை சுமத்தினார். இது அமெரிக்காவில் பதவிக்கு வரவிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடனின் ஈரானுடனான எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் சிக்கலாக்குவதாக உள்ளது.

ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட 2015 அணு சக்தி உடன்படிக்கையில் இருந்து டிரம்ப் விலகிக் கொண்டதை அடுத்து அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரானின் உச்ச அதிகாரத்தை பெற்றிருக்கும் கொமனெய், ஒருபோதும் ஆணு ஆயதத்தை நாடவில்லை என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்செயல் தொடர்பில் விசாரணை செய்து தாக்குதல்தாரிகள் மற்றும் அதற்கு உத்தரவிட்டவர்களை தண்டிப்பதற்கு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பக்ரிசதாஹ் பொது வெளியில் அதிகம் தெரியாதவராக இருந்தபோதும் ஈரான் அணு ஆயுதச் செயற்பாட்டில் பிரதான பங்கு வகிப்பவர் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. டெஹ்ரானில் வைத்து அவரது கார் வண்டி சுற்றிவளைக்கப்பட்டு சரமாரி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

‘ஈரான் இதற்கு சரியான வகையில் பதிலடி கொடுக்கும்’ என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி கடந்த சனிக்கிழமை தொலைக்காட்சி சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

‘உலகளாவிய ஆணவம் கொண்ட சியோனிச கூலிப்படையின் கறைபடிந்த கைகளால் மீண்டும் ஒருமுறை ஈரானிய புதல்வனின் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது’ என்று அவர் இதன்போது தெரிவித்தார். இதில் அவர் இஸ்ரேலை குற்றம்சாட்டும் சொற்பிரயோகத்தையே பயன்படுத்தி இருந்தார்.

இந்தக் கொலை தொடர்பில் தமக்குத் தெரியாது என்று இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உறுதியாகத் தெரிவித்ததாக இஸ்ரேலிய அமைச்சர் ட்சச்சி ஹெனக்பி தெரிவித்துள்ளார்.

ஈரானின் எச்சரிக்கையை அடுத்து சில நாடுகளின் இஸ்ரேல் தூதரகங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி தெரிவித்துள்ளது.

இந்தக் கொலை தொடர்பில் கருத்துக் கூற வெள்ளை மாளிகை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ அதேபோன்று பைடனின் அதிகார மாற்றக் குழு மறுத்துள்ளன. பைடன் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுடன் அணு சக்தி உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் ஜெர்மனி மற்றும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அனைத்துத் தரப்புகளையும் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Mon, 11/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை