அடக்கம் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பில் இவ்வாரம் இறுதி முடிவு

ஆதரவான எதிரணிக் கருத்துக்கள் குறித்து ஆராய்வு

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை புதைப்பதற்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் இவ்வாரம் தீர்க்கமான முடிவு எடுக்க இருப்பதாக அறிய வருகிறது.

கொவிட் 19 தொற்றினால் இறக்கும் முஸ்லிம்களை புதைக்க அனுமதி வழங்கப்பட்டதாக கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.இதனை சிலர் மறுத்ததோடு சிலர் சரியென்று குறிப்பிட்டார்கள்.

கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக நீதி அமைச்சர் அலி சப்ரி அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதன் போது புதைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர்களான மஹிந்த அமரவீர,சமல் ராஜபக்ஷ ஆகியோர் கூறிய அதே வேளை அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என விமல் வீரவங்ச, கெஹெலிய ரம்புக்வெல்ல,ரமேஷ் பதிரண போன்றோர் கூறியிருந்தனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி,

கொரோனா மரணங்களை புதைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கருத்து பரிமாறப்பட்டது.இது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப குழுவுடன் கலந்துரையாடி முடிவு எடுக்குமாறு எனக்கு அறிவிக்கப்பட்டது.

இதனுடன் தொடர்புள்ள தொழில்நுட்ப குழுவின் சில அறிக்கைகள் எனக்கு கிடைக்க வேண்டியுள்ளது.அந்த பரிந்துரைகள் கிடைத்ததும் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கொவிட் 19 இனால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்கள் தொடர்பில் ஆராயும் நிபுணர் குழுவின் அறிக்கை எதிர்வரும் நாட்களில் சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட இருப்பதாக அமைச்சு தகவல்கள் தெரிவித்தன. அவை கிடைத்ததும் இவ்வாரம் சுகாதார அமைச்சர் இது தொடர்பான தனது இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் அலி சப்ரியின் வேண்டுகோளுக்கு அமைய நிபுணர் குழு இருவாரங்களுக்குமுன் கூடி புதைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக மீளாய்வு செய்தது. இதன் போது எந்த முடிவும் எட்டப்படாதது குறிப்பிடத்தக்கது. (பா)

ஷம்ஸ் பாஹிம்

Mon, 11/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை