’ஊதா நிற தொப்பி’ யாருக்கு? ரபாடா - பும்ரா கடும் போட்டி

இறுதி ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2-ஆவது தகுதிச்சுற்று (குவாலிபயா்-2) ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத்தை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ், முதல் முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணியின் ரபாடா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்த ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 29 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் ரபாடா. அதேவேளையில் 27 விக்கெட்டுகள் எடுத்துள்ள மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா 2-ம் இடத்தில் உள்ளார்.

இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க ரபாடா - பும்ரா இடையே கடும் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிப் பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஷிக்கர் தவான் 78 ஓட்டங்களையும் ஹெட்மேர் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் சந்திப் சர்மா, வோல்டர், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 190 ஓட்டங்கள் என்ற வெற்றியிழக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஹைதராபாத் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

இதனால் டெல்லி அணி 17 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக கேன் வில்லியம்சன் 67 ஓட்டங்களையும் அப்துல் சமாட் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி அணியின் பந்துவீச்சில் ரபாடா 4 விக்கெட்டுகளையும் ஸ்டொய்னிஸ் 3 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டெல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக 38 ஓட்டங்களையும் 3 விக்கெட்டுகளையும் சாய்த்த டெல்லி அணியின் சகலதுறை வீரர் ஸ்டொய்னிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

Tue, 11/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை