உலக கொரோனா தொற்று 60 மில்லியனைத் தொட்டது

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் 60 மில்லியனைத் தொட்டுள்ளது. இந்த நோய்த் தொற்றின் புதிய அலை தீவிரம் அடைந்து, அமெரிக்காவில் அதிக தொற்றாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையிலேயே இந்த புதிய உச்சத்தை கண்டுள்ளது.

உலகில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் விடுமுறை நாட்களில் மக்கள் வீடுகளில் இருக்கும்படி கோரப்படுகின்றனர். அங்கு மருத்துவமனைகளில் நோயாளர்கள் எண்ணிக்கை மிதமிஞ்சி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் ஒரு மில்லியன் புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு இதன்மூலம் அந்நாட்டில் மொத்த தொற்றுச் சம்பவங்கள் 12.5 மில்லியனாக உயர்ந்துள்ளது. தவிர, 260,000 பேர் வரை உயிரிழந்திருப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ரோய்ட்டர் செய்தி நிறுவனத்தின் தரவுகள் காட்டுகின்றன.

இதன்படி உலக நோய்த் தொற்றுச் சம்பவங்கள் 60.005 மில்லியனாக உயர்ந்திருப்பதோடு இந்தப் பெருந்தொற்றினால் உலகெங்கும் 1.4 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நோய்த் தொற்று உலகெங்கும் புதிய தீவிரத்தை எட்டி இருக்கும் நிலையில் 50 மில்லியன் நோய்த் தொற்றுச் சம்பவங்களில் இருந்து அது 60 மில்லியனை எட்டுவதற்கு வெறும் 17 நாட்களே எடுத்துக்கொண்டுள்ளதாக ரோய்ட்டர்ஸ் தரவுகள் கூறுகின்றன. இதுவே 40 மில்லியனில் இருந்து 50 மில்லியனை எட்டுவதற்கு 21 நாட்கள் எடுத்துக் கொண்டது.

கடந்த ஒரு வாரத்தில் உலகெங்கும் தினசரி சராசரியாக 580,000 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின்றன. இந்த நோய்த் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் தற்போதுவரை பதிவான சம்பவங்களில் பாதி அளவு கடந்த 7 நாட்களுக்குள் பதிவானவையாகும்.

ஐரோப்பாவில் வெறும் ஐந்து நாட்களுக்குள் 1 மில்லியன் புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அங்கு மொத்தம் 16 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 365,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கிரிஸ்மஸ் விடுமுறையில் நோய்ப் பரவல் அதிகரிக்கும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகள் பொது வாழ்வில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.

இங்கிலாந்தில் தேசிய அளவிலான முடக்க நிலையில் அடுத்த வாரம் முடிவுக்கு கொண்டுவரப்படவிருப்பதோடு, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட விருந்தினர்கள் உட்பட விடுமுறை நாட்களிலும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

உலகில் அதிக உயிரிழப்புச் சம்பவங்கள் பதிவாகி இருக்கும் லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில், உலக தொற்றுச் சம்பவங்களில் 21 வீதமும், உலக உயிரிழப்பு எண்ணிக்கையில் 31 வீதமும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து உலகில் 6 மில்லியன் தொற்றுச் சம்பவங்களைக் கொண்ட மூன்றாவது நாடாக பிரேசில் கடந்த வாரம் பதிவானது. அங்கு சுமார் 170,000 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் இரண்டாவது அதிக உயிரிழப்பு பதிவான நாடாக பிரேசில் உள்ளது.

மறுபுறம் உலகில் இரண்டாவது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் இந்தியாவில் 9.2 மில்லியன் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும் அண்மைய வாரங்களில் தொற்றுச் சம்பவங்கள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த வாரத்தில் சுமார் 44,000 தினசரி தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். கடந்த செப்டெம்பர் நடுப்பகுதியில் இந்தியாவில் நோய்த் தொற்று உச்சத்தை பெற்றிருந்தபோது தினசரி 97,900 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

சீனா, தென் கொரியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற ஆசிய பசிபிக் நாடுகளில் இந்த தோற்றுக்கு எதிரான வேகமான நடவடிக்கைகள் அதனைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பதை காட்டுவதாக உள்ளது.

Fri, 11/27/2020 - 11:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை