நைஜீரியாவில் 43 விவசாயத் தொழிலாளர்கள் படுகொலை

வடகிழக்கு நைஜீரியாவில் நெல் வயல்களில் பணியாற்றும் பலரையும் தாக்குதல்தாரிகள் கொன்றிருப்பதாக நகரின் பல உள்ளூர் தரப்புகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

போர்னோ மாநிலத் தலைநகர் மைடிகுரிக்கு அருகில் உள்ள கொசோபே கிராமத்தில் தாக்குதல்தாரிகள் விவசாயத் தொழிலாளர்களை கட்டி அவர்களின் கழுத்தை வெட்டி கொன்றுள்ளனர்.

‘படுகொலை செய்யப்பட்ட 43 உடல்களை நாம் மீட்டதோடு மேலும் ஆறு பேர் படுகாயத்திற்கு உள்ளாகி இருந்தனர்’ என்று பிராந்தியத்தின் உள்ளூர் போராட்டக் குழு ஒன்றின் தலைவரான பபகுரா கோலோ ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தலைவர்கள் மற்றும் பொலிஸாரை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் இதனை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்தாரிகளை பாதுகாப்புப் படையினர் தேடி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொக்கோ ஹராம் மற்றும் மேற்கு ஆபிரிக்க பிராந்திய இஸ்லாமிய அரசுக் குழு வடகிழக்கு நைஜீரியாவில் தீவிரமாக இயங்கி வருகின்றன. 2009 தொடக்கம் இந்த இரு தரப்பின் வன்முறைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு சுமார் இரண்டு மில்லியன் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

‘இங்கு இயங்கும் பொக்கோ ஹராம் குழுவினர் விவசாயிகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துவதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று உயிர் தப்பியவர்களுக்கு உதவிய கோலோ தெரிவித்தார்.

இதன்போது மேலும் எட்டுப் பேர் காணாமல்போயுள்ளனர். இவர்கள் தாக்குதல்தாரிகளால் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த மாதம் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் பொக்கோ ஹராம் தாக்குதல்தாரிகள் 22 விவசாயிகளை படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 11/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை