எத்தியோப்பிய போர்: பிராந்திய தலைநகர் மத்திய அரசின் வசம்

வடக்கு டைக்ரே பிராந்திய தலைநகரை அரச படை முழுமையாக கைப்பற்றியதாக எத்தியோப்பிய பிரதமர் அபிய் அஹமது அறிவித்துள்ளார். இராணுவம் தலைநகர் மிகைலிக்குள் நுழைந்து டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி மீது தாக்குதல் தொடுத்ததாக அவர் கூறினார்.

எனினும் தமது சுய நிர்ணய உரிமைக்காக தொடர்ந்து போராடுவதாகவும், இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக கடைசி வரை போராடுவதாகவும் டைக்ரே பிராந்திய அரச தலைவர்கள் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்த மோதலால் நுற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.

வடக்கில் இருக்கும் இராணுவ தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே பிராந்திய ஆளும் கட்சிக்கு எதிராக எத்தியோப்பிய மத்திய அரசு இந்த மாத ஆரம்பத்தில் யுத்த நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தது. இந்நிலையில் அபிய் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், இராணுவம் நகரை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகவும் (இராணுவத்தின்) கடைசி கட்ட நடவடிக்கையும் பூர்த்தி அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

டைக்ரே பிராந்தியத்தின் தொலைபேசி, இணையதள இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கிருந்து வரும் எந்த செய்தியையும் உறுதி செய்ய முடியவில்லை என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எத்தியோப்பிய அரசியலில் செல்வாக்கு மிக்க சக்தியாக இருந்து வந்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் செல்வாக்கு 2018 ஆம் ஆண்டு அபிய் பதவிக்கு வந்த பின்னர் இழந்துள்ளது. இதனை அடுத்து பிராந்திய அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முறுகல் நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 11/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை