கொரோனா வைரஸ் நோயாளிகள் 12,018 ஆக அதிகரிப்பு: மரணம் 24

78 வயதுடைய கொட்டாஞ்சேனை நபரே நேற்று உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்று 24ஆவது நோயாளி நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய நபரே நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 12,018ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் மேலும் 277 வைரஸ் தொற்று நோயாளிகள் குணமடைந்துள்ளதுடன் இதுவரை மொத்தமாக 5858 வைரஸ் தொற்று நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதற்கிணங்க மேலும் 5823 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சைளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

மேல் மாகாணத்தில் மாத்திரம் இதுவரை வைரஸ் தொற்று உறுதியான வர்களின் எண்ணிக்கை 5898 ஆக அதிகரித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 3598 பேருக்கும் கொழும்பு மாவட்டத்தில் 2003 பேருக்கும் களுத்துறை மாவட்டத்தில் 297 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் வட கொழும்பு மற்றும் மத்திய கொழும்பு பகுதிகளிலேயே பெருமளவானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக கொழும்பு நகர சபை சுகாதார மருத்துவர் டாக்டர் கார்த்திகேசு ஸ்ரீ பிரதாபன்தெரிவித்துள்ளார் .

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக நாட்டில் 49 வைத்தியசாலைகளில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்வதற்காக 1100 ஆஸ்பத்திரி கட்டில்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்

நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டுள்ள நோயாளர்களில் நான்கு பேர் மாத்திரமே அவசர சிகிச்சை பிரிவுகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதில் ஏற்படும் தாமதங்களை தவிர்க்கும் வகையில் விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க 0117966366 என்ற இலக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை வைரஸ் தொற்று அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சு இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

நேற்றைய தினம் பொருளாதார மத்திய நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் கிடையாது என புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Thu, 11/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை