கொரோனா தொற்று அதிகரிப்பினால் உயிரிழப்பு வேகம் அதிகரிக்கலாம்

உலக சுகாதார அமைப்பு அச்சம்

உலகில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

ஐரோப்பாவில் தினசரி புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் 100,000 ஐ தொட்டுள்ளன. பிரிட்டனில் சுமார் 20,000 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதோடு இந்த எண்ணிக்கை சாதனை அளவுக்கு அதிகரித்த நாடுகளில் இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யாவும் உள்ளன.

மறுபுறம் கொவிட்–19 தொற்றினால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஏப்ரலில் நாளுக்கு 7,500 என உச்சத்தை எட்டியிருந்த நிலையில் தற்போது அது நாளுக்கு 5,000 என வீழ்ச்சி கண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளம்யா சுவாமினாதன் தெரிவித்தார். எனினும் அவசர சிகிச்சை பிரிவுகளில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“சில வாரங்களில் தொற்று சம்பவங்கள் அதிகரித்திருக்கும் பின்னணியில் வழக்கம்போல் உயிரிழப்பு அதிகரிக்கும்” என்று உலக சுகாதார அமைப்பின் சமூகதள நிகழ்வின்போது சுவாமினாதன் தெரிவித்தார். “உயிரிழப்பு வேகம் குறைந்திருப்பது பற்றி நாம் தன்னிறைவு அடையக் கூடாது” என்றும் அவர் கூறினார்.

உலகெங்கும் 38 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதோடு 1.1 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

Fri, 10/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை