கொரோனா இரண்டாம் அலை தீவிரம்: முடக்க நிலைக்கு திரும்பும் ஐரோப்பா

கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் தேசிய அளவிலான பொது முடக்கநிலை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை முதல் பிரான்ஸ் மக்கள் அத்தியாவசிய தேவை மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மாத்திரமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.

முதலாவதை விடவும் இரண்டாவது அலைத் தாக்கம் சந்தேகமின்றி கடுமையாக இருப்பதன் காரணமாக நாட்டின் நிலைமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் ஜெர்மனியில் ஒரு மிதமான தேசிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரவிருக்கும் நடவடிக்கை பிரான்ஸை விட தீவிரம் குறைவாக உள்ளது. எனினும் உணவகங்கள், மதுபானக் கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என்று ஜெர்மனி சான்செலர் அங்கேலா மேர்கல் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கடந்த புதனன்று 24,701 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் மற்றும் 310 உயிரிழப்புகள் உட்பட ஐரோப்பா எங்கும் கொவிட்–19 சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 100,000 பேருக்கு நோய்த் தொற்று ஏற்படுவதாக புதிய ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இது அரசின் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்த அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரலில் இருந்து கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து காணப்படுகிறது. கடந்த புதன்கிழமை அங்கு 36,437 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவானதோடு 244 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் கடந்த புதன்கிழமை 89 பேர் உயிரிழந்ததோடு முடிவுற்ற 24 மணி நேரத்தில் 16,774 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த முடக்க நிலையால் நிதிச் சந்தைகள் கடந்த புதன்கிழமை வேகமான வீழ்ச்சியை பதிவு செய்தன.

“நாம் இரண்டாவது அலைக்குள் ஆழ்ந்துள்ளோம்” என்று குறிப்பிட்ட ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வொன் டெர் லெயென், “இந்த ஆண்டு கிறிஸ்மஸ் வித்தியாசமான கிறிஸ்மஸாக இருக்கும்” என்றார்.

Fri, 10/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை