நாட்டில் அவசர நிலைமை அரசு நேற்று பிரகடனம்

சந்தேகத்திற்கிடமானோருக்கு தொடர்ந்தும் PCR பரிசோதனை

கொரோனா தொற்றாளர் தொகை 73 ஆக உயர்வு

கொரோனா தொற்றாளர்களின் தொகை நேற்று மாலையாகும் போது 73 ஆக உயர்ந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்ணுக்கும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்றியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 71 ​பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இதே வேளை கொரோனா தொற்று ஏனைய பகுதிகளுக்கும் பரவுவதை தடுக்கும் நோக்குடன் நாட்டில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முறையான சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

சமூகத்தில் இருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளான பலர் அடையாளங் காணப்பட்ட நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்மணி தொழில் புரிந்த ஆடைத்தொழிற்சலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டதோடு நேற்று மாலை மேலும் இருவருக்கு கொரோன தொற்றியது கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திவுலப்பிட்டியில் நேற்று முன் தினம் புதிதாக சமூகத்திலிருந்து இனங்காணப்பட்ட பெண்மணியின் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு நேற்று முன் தினம் பி. சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் நேற்றைய தினம் அதன் அறிக்கை வெளியிடப்பட்டதையடுத்து மேற்படி 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க இனங் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுடன் நெருங்கய தொடர்பு உடைய மேலும் நபர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் அமைச்சு தெரிவித்தது.

நேற்று முன்தினம் திவுலப்பிட்டி பிரதேசத்தில் 39 வயதான பெண்மணி கொரோனா வைரஸ் தொற்று நோயாளியாக இனங் காணப்பட்டார். ஐ. டி. எச். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின் அந்த நோயாளியின் மகளான 16 வயது யுவதியும் வைரஸ் தொற்றுககு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது. அதற்கிணங்க தற்போது கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய, மினுவாங்கொடை, வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் நேற்று மதியம் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் சமூகத்தில் மேலும் வைரஸ் தொற்று நோயாளிகள் இருக்கலாம் என்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் மாத்திரமே ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள நிலையில் மாத்திரமே நாட்டில் ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது அவசியம் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மக்கள் ஒன்றுகூடும் இடத்தில் தரித்திருக்க வேண்டாம் என்றும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேறும் போது முகக் கவசம்அணிவதை உறுதி செய்துகொளள வேண்டும் என்றும் முகத்தில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தொடர்ச்சியாகக் கைகளைக் கழுவுமாறும் அவர் தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்று நோயாளி ஒருவரிடமிருந்து மற்றுமொரு நபருக்கு தொற்றுவதைத் தடுக்கும் வகையில் முறையாக சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது அவசியம். அதேவேளை முதியவர்களைப் பதாதுகாப்பதும் முக்கியமாகும். அதற்கிணங்க திறந்த வெளியில் செயற்பாடுகளை முடிந்தளவு குறைத்துக் கொள்ளுதல் சிறந்தது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேவேளை வைரஸ் தொற்றுக்குள்ளான 16 வயதான மாணவி கல்விகற்ற பாடசாலையில் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் நேற்று பி. சி ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என திவுலபிட்டிய நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் எச். ஏ. யூ. சி. குலதிலக்க தெரிவித்துள்ளார். அத்துடன் மேற்படி மாணவி கல்வி கற்ற திவுலபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் 1500 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன் தினம் இரவு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒலிபெருக்கி மூலம் குறித்த மாணவர்களுக்கு அது அறிவிக்கப்பட்டாகவும், சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். மேலும் மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புரிந்து வீடுகளுக்குச் சென்றுள்ள சிலரும் உள்ளனர். அதனால் நாடளாவிய ரீதியிலுள்ள சுகாதார பரிசோதகர் அது தொடர்பில் தகவல்களைத்திரட்டி வருவதுடன் அவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

இதே வேளை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்படலாம் என பரவலாக பேசப்பட்டாலும் அரச தரப்பில் எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை.ஆனால் மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு முண்டியடிப்பதாக அறிய வருகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 10/06/2020 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை