டெங்கு நோயை கட்டுப்படுத்த கிணற்றுக்குள் மீன்கள்

டெங்கு நோயை கட்டுப்படுத்த கிணற்றுக்குள் மீன்கள்-Putting Fish to Control Dengue Breeding-Nintavur

நிந்தவூரில் முன்னெடுப்பு

நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டெங்கு நோயின் தாக்கம் காரணமாக அவைகளை கட்டுப்படுத்தும் முகமாக நிந்தவூர் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பு (USSO) மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியவை இணைந்து, முதற்கட்டமாக நிந்தவூர் 20 மற்றும் 21 ஆம் பிரிவுகளில் காணப்படுகின்ற கிணறுகளுக்குள் மீன்கள் இடும் நடவடிக்கைகள் இன்றைய தினம் (11)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர், மற்றும் ஐக்கிய சமூக சேவையில் அமைப்பினர், நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக நிந்தவூர் பிரதேசத்தில்  அண்மைக் காலமாக பல சமூக சேவைகளை புரிந்து வரும் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பினர் கடந்த வாரம் இப்பிரதேசத்தில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றை வெற்றிகரமாக நடாத்தியிருந்தனர். இதில் 135 க்கும் அதிகமானவர்கள் தங்களது இரத்தங்களை தானம் செய்திருந்ததுடன், இவர்களின் மற்றுமொரு சமூக சேவை பணியாக இந்த பணி அமைந்துள்ளது.

குறிப்பாக அண்மைக்காலமாக நிந்தவூர் பிரதேசத்தில் 40க்கும் அதிகமான டெங்கு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த மீன்கள் விடும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.

இதேவேளை இப் பரதேசத்தில் உள்ள கிராம சேவைப்பிரிவுகளான 20 மற்றும் 21 ஆம் பிரிவுகளிலேயே அதிகமான டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் டெங்குநோய் பரவுவதை தடுக்கும் வகையில், இம்மாதம் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஒருவார காலத்திற்கு தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாக பெயரிடுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(நிந்தவூர் குறூப் நிருபர் - சுலைமான் ராபி)

Sun, 10/11/2020 - 14:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை