ரியாஜ் பதியுதீனின் விடுதலை; ஆவணங்களுடன் வருமாறு சட்ட மாஅதிபர் உத்தரவு

ரியாஜ் பதியுதீனின் விடுதலை; ஆவணங்களுடன் வருமாறு சட்ட மாஅதிபர் உத்தரவு-AG Summons DIG-CID-Chief Investigation Officer with Riyaj Bathiudeen Invest Files

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பான அனைத்து விசாரணைக் கோப்புகளுடனும் நாளை (12) முன்னிலையாகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மற்றும் CIDயின் பிரதான விசாரணை அதிகாரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

சட்ட மாஅதிபரின் உரிய ஆலோசனையைப் பெறாமல் CIDயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரியாஜ் பதியுதீனை விடுதலை செய்தமை தொடர்பில் விளக்கமளிக்கும் பொருட்டே குறித்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

CIDயினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சட்ட மாஅதிபர் ஆராயவுள்ளதாகவும், நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். அத்துடன் ரியாஜ் பதியுதீன் சார்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஹேபியஸ் கோபஸ் ஆகிய மனுக்களை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, அவரை விடுதலை செய்வதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் சட்ட மாஅதிபர் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை அனைத்தையும் ஆராய்ந்து சட்ட மாஅதிபர் உரிய தரப்பினருக்கு, உரிய நடவடிக்கையை எடுப்பதற்கான ஆலோசனையை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்குதல்தாரிகளுக்கு உதவி புரிந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான சந்தேகத்தின் பேரில், CIDயினரால் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி, ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டதோடு, 5 மாதங்களின் பின்னர் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அவர் மீது வழக்குத் தொடருவதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என, தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (09) அரச தரப்பு எம்.பிக்கள் 100 பேரின் கையொப்பத்துடன், ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sun, 10/11/2020 - 12:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை