ராஜஸ்தான் அணியிடம் சென்னை தோல்வி

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடனான ஐ.பி.எல் டி20 லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐ.பி.எல் பருவத்தில் 37ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் கடந்த திங்கட்கிழமை இரவு மோதின. ஷேக் சையத் அரங்கில் நடந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணித் தலைவர் தோனி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். இது ஐ.பி.எல் தொடரில் அவர் களமிறங்கிய 200ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியில் பிராவோ, கர்ணுக்கு பதிலாக ஹேஸல்வுட், சாவ்லா இடம் பெற்றனர். ராஜஸ்தான் அணியில் உனத்கட் நீக்கப்பட்டு, ராஜ்பூட் சேர்க்கப்பட்டார். சாம் கரன், டு பிளெஸ்ஸி இருவரும் சென்னை இன்னிங்ஸை ஆரம்பித்தனர். டு பிளெஸ்ஸி 10 ஓட்டங்கள் எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் பட்லர் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த வொட்சன் 8 ஓட்டங்களில் வெளியேற, சென்னை 4 ஓவரில் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.

கோபால், திவாதியா இருவரும் அபாரமாகப் பந்துவீசி சென்னை துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். சாம் கரன் 22 ஓட்டங்கள், ராயுடு 13 ஓட்டங்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, சென்னை அணி 10 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்த நிலையில் அணித்தலைவர் தோனி, ஜடேஜா இருவரும் இணைந்து ஓட்டங்களை உயர்த்த போராடினர். இந்த ஜோடி 5ஆவது விக்கெட்டுக்கு 51 ஓட்டங்கள் சேர்த்தது. தோனி 28 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

சென்னை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்கள் எடுத்தது. ஜடேஜா 35 ஓட்டங்களுடனும், கேதார் ஜாதவ் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பதிலெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ரொபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் இருவரும் துரத்தலை ஆரம்பித்தனர்.

இதில் பென் ஸ்டோக் 19 ஓட்டங்கள் எடுத்து சாகர் வசம் பிடிபட்டார். உத்தப்பா 4 ஓட்டங்களுடனும், சாம்சன் ஓட்டம் இன்றியும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஸ்மித் 26 ஓட்டங்களும், பட்லர் 70 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இதன்மூலம் ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு நிர்ணயித்த 126 ஓட்டங்கள் இலக்கை எட்டிப் பிடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Wed, 10/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை