Header Ads

ஹில்கன்ட்ரீ துப்பாக்கி சூட்டு விளையாட்டு கழக 9வது துப்பாக்கி சூட்டு போட்டியின் இறுதி போட்டி

சுமார் மூன்று தசாப்தகாலமாக வடக்கு, கிழக்கில் யுத்தத்தின் போது இப்பகுதியில் தொடர் துப்பாக்கி வேட்டுச்சத்தங்களின் காரணமாக இப்பகுதி பொது மக்கள் பீதியுடன் தங்கள் உயிர்களை மற்றும் தமது உடன்பிறப்புகள் மற்றும் குழந்தைகளின் உயிர்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவேண்டி பட்ட துயரங்களையும் இன்னல்களையும் அதன் கஷ்டங்களையும் அந்த கசப்பான உணர்வுகளையும் எம்மை விட வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற அப்பாவி பொதுமக்கள் நன்கு அறிவார்கள்.

மூன்று தசாப்தகாலமாக துப்பாக்கி வேட்டுகளின் மூலம் பல இலட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்ட இதே துப்பாக்கி இன்று துப்பாக்கி சூட்டு போட்டிகளின் மூலம் வெற்றிக்கேடயங்களை கைகளில் ஏந்தி தங்கப்பதக்கங்களை கழுத்தில் மாற்றிக்கொள்ளும் அளவிற்கு நமது நாட்டில் துப்பாக்கி கலாசாரம் மாறியுள்ளமை நாமும் நம் நாடும் பெற்றுக்கொண்ட மாபெரும் வரப்பிரசாதமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மத்தியமாகாண ஹில்கன்ட்ரீ துப்பாக்கி சூட்டு விளையாட்டு கழகம் 9வது வருடமாக நடாத்திய துப்பாக்கி சூட்டு போட்டியின் இறுதி போட்டி (04ம் திகதி) கண்டி ஹந்தான மலையுச்சியில் இடம்பெற்ற போது இந்நிகழ்வின் விஷேட அதிதியாக கலந்து கொண்ட இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்:சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் எமது நாடு விடுதலைபுலிகளின் பயங்கர யுத்தம் காரணமாக நாடு ஒரு இருண்ட யுகத்தில் காணப்பட்டு நாடாளவிய ரீதியில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு நம்நாட்டு அபிவிருத்தி பணிகள் முடங்கி காணப்பட்ட அந்தக் காலம் பற்றி நினைக்கும் போதும் அந்த பயங்கர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாடும் நாமும் இன்று விடுகின்ற நிம்மதியான பெருமூச்சுக்காரணமாக இன்று நாம் சுதந்திர வாடையை நுகர்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படியொரு அனர்த்தம் மீண்டும் நம்நாட்டில் தலையோங்காமல் பாதுகாத்துக்கொள்ள நாம் ஒவ்வொருவரும் கடமை உணர்ச்சியுடன் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

விடுதலை புலிகளின் பயங்கர யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதும் இன்று முழு உலகை ஆட்டி படைக்கும் கொரானா வைரஸ் கோவிட் 19 நம் நாட்டையும் ஆட்டி படைக்க தவறவில்லை. முழு உலகிலும் பல இலட்சணக்கணக்கான உயிர்களை இதே கொரோனா காவு கொண்டிருக்கும் போது நம் நாட்டு ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் பாதுகாப்பு படையினரதும் சுகாதார பகுதியினரதும் அளப்பரிய சேவையின் காரணமாக சுமார் மூன்று அல்லது நான்கு உயிர்களையே கொரோனாவுக்கு பலிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இலங்கையின் மத்திய பிரதேச ஹில்கன்ட்ரீ ஸ்போர்ட்ஸ் சூட்டீங் கழகம் துப்பாக்கி சூட்டு போட்டியை 9வது வருடமாக நடத்துவது இந்நாட்டில் சுபீட்சமாக நிலை உருவாகியுள்ளமைக்கு ஒரு சாதக சம்பவமாகும்.

இப்பொழுது விளையாட்டுத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் விளையாட்டுத்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றேன். தேசிய ரீதியில் சகல விளையாட்டுத்துறைகளிலும் பிரகாசிக்க கூடிய சகல விளையாட்டு வீர, வீராங்கணைகளையும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதே எனது முக்கிய இலக்கு.

துப்பாக்கி சூட்டு போட்டி என்பது நம் நாட்டில் பலருக்கு தெரியாத ஒரு விடயம். இப்படியொரு துப்பாக்கி சூட்டுக்கென ஒரு விளையாட்டு கழகத்தை உருவாக்கி அதை வழிநடத்துவதும் இப்படி பட்ட போட்டிகளை நடாத்துவதும் பாரிய கஷ்டமாகும். எதிர்காலத்தில் மத்திய மாகாணத்தில் இயங்கும் இவ்விளையாட்டு கழகத்துக்கு தேவையான சகல அரச அனுசரணைகளையும் நான் வழங்கிட ஏற்பாடு செய்வேன். உயிர்களை காவு கொள்ளும் துப்பாக்கிகள் மூலமாக விளையாட்டு பயிற்சிகளை ஏற்படுத்தி துப்பாக்கிகளால் சாதனை படைக்கும் வீரர்களை உருவாக்குவதில் முன்னணியாக திகழும் ஹில்கன்ட்ரீ சூட்டிங் ஸ்போர்ட்ஸ் கழகத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் போட்டியாளராகவும் பரிசுபெறுபவராகவும் அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உக்குவளை விஷேட நிரூபர்

Thu, 10/08/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.