20 ஆவது திருத்தம் குறித்து ஆராய கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் நாளை அழைப்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ள ப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கலந்து ரையாடுவதற்காக நாளை வெள்ளிக்கிழமை விசேட கட்சித் தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பி.ப. 1.30 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப் படவுள்ள திருத்தங்கள் தொடர்பில், இதன்போது விரிவாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுமென அரசாங்கத்தின் தகவலறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனை எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்தப்பின்புலத்தில் கட்சித் தலைவர் கூட்டத்தில், கலந்துரையாடப்படவுள்ள திருத்தங்களையும் அன்றைய தினம் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, ஐவரடங்கிய நீதியரசர் குழாம் கடந்த சனிக்கிழமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் அறிவித்திருந்தது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி 39 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர் ஜயந்த ஜயவிக்கிரம தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர் குழாம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தியிருந்த நிலையிலேயே கடந்த 10ஆம் திகதி 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 10/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை