கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு 10 ஆயிரம் டொலர் நிதியுதவி

இலங்கையில் கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு 10,000 அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு தேசிய ஒலிம்பிக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் வருமானத்தை இழந்து போசாக்கு உள்ளிட்ட விடயங்களை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள வீரர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் முன்னெடுக்கப்படுகின்ற புரிந்துணர்வு நிகழ்ச்சிக்கு அமைய தேசிய ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து செயற்படுகின்ற மெய்வல்லுநர் விளையாட்டு ஆணைக்குழுவினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, கொவிட் – 19 வைரஸினால் பெரிதும் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களை இனங்கண்டு, அவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் போசாக்கு உணவுகள் உள்ளிட்ட செலவுகள் குறித்த தரவுகளை திரட்டிய பிறகு அவர்களது விபரங்களை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு மெய்வல்லுனர் விளையாட்டு ஆணைக்குழு பரிந்துரை செய்யும்.

எனவே, குறித்த வேலைத்திட்டத்துக்கு அமைய எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு மாதமும் அந்த வீரர்களுக்கு தலா 5 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வாரம் தேசிய ஒலிம்பிக் குழு இல்லத்தில் அதன் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா தலைமையில் இடம்பெற்றது.

மெய்வல்லுநர் விளையாட்டு ஆணைக்குழுவினால் இலங்கையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக ஆங்கில மொழி கற்கை நெறியொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்று குழுக்களாக நடைபெறுகின்ற குறித்த கற்கை நெறியில் 33 வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், 3 மாத காலங்களைக் கொண்டதாக இடம்பெறுகின்ற இந்தக் கற்கை நெறியானது வாரமொன்றுக்கு 3 பகுதிகளாக தலா 2 மணித்தியாலங்கள் இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Mon, 10/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை