அமெரிக்காவின் பாலியல் வழிபாட்டு குழு தலைவருக்கு 120 ஆண்டு சிறை

அமெரிக்காவில் பாலியல் வழிபாட்டு குழுவின் தலைவர் ஒருவருக்கு 120 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெக்சியம் என்று அழைக்கப்படும் அந்தக் குழுவின் தலைவரான கீத் ரேனியர் மோசடி, பாலியல் கடத்தல், சிறுவர் ஆபாசப்படங்களை வைத்திருந்தது மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளில் கடந்த ஆண்டு குற்றங்காணப்பட்டார்.

அந்தக் குழுவின் தலைவராக அவர் பெண்களை அடிமையாகப் பணியமர்த்தி அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வழிபாட்டு முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளவிட முடியாத இழப்புகளை ஏற்படுத்திய 60 வயதான அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசதுறை வழக்கறிஞர்கள் கேட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை புரூக்ளைனில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில் ரேனியருக்கு 1.75 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து நெக்சியம் குழு பற்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

நியூயோர்க்கின் அலபாமா நகரைத் தலைமையகமாகக் கொண்டு 1998 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் குழு தமது வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை கருத்தரங்குகளை நடத்தி வந்துள்ளது.

இதில் ரேனியர் தமக்கென பெண்கள் மட்டுமான குழு ஒன்றை செயல்படுத்தி வந்ததாகவும் அந்தக் குழுவினர் அவருடனான சந்திப்பின்போது நிர்வாணமாக இருக்க வலியுறுத்தப்பட்டதாகவும் குழுவில் இருந்து வெளியேறிய பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.

5 ஆயிரம் டொலர் கட்டணத்தில் சேரும் பெண்களுக்கு ஆரோக்கிய உணவை கொடுப்பதுடன், அவர்களது உடலில் தனது முதலெழுத்துகளை முத்திரை குத்தி பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாக ரேனியர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

Thu, 10/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை