Header Ads

கொவிட்–19: ஐரோப்பாவெங்கும் தினசரி உயிரிழப்பு அதிகரிப்பு

ஐரோப்பாவில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதில் மூன்றில் ஒரு சம்பவங்கள் பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன், நெதர்லான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் பேச்சாளர் டொக்டர் மார்க்ரேட் ஹரிஸ் தெரிவித்தார்.

“மோசமாக சுகவீனமுற்றவர்களால் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வருவது கவலை அளிக்கிறது” என்று அவர் கூறினார்.

ரஷ்யாவில் தினசரி உயிரிழப்பு 320 ஆக உச்சம் பெற்ற நிலையில் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 26,589 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியிலும் கடந்த 24 மணி நேரத்தில் 221 உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. ஆஸ்திரியாவின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த செவ்வாயன்று ஆயிரத்தை தாண்டியது. அமெரிக்கா, இந்தியா, பிரேசிலுக்கு அடுத்து உலகில் அதிக கொவிட்–19 சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நாடான ரஷ்யாவில் கடந்த செவ்வாய் அன்று 16,550 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் அங்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இத்தாலியிலும் நோய்த் தொற்று வேகம் தீவிரம் அடைந்து கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 22,000 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எனினும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பெல்ஜியத்தில் சுகாதார கட்டமைப்பு நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் நிலையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானாலும் தொடர்ந்து பணியில் ஈடுபடுவதற்கு அந்நாட்டு மருத்துவர்கள் கோரப்பட்டுள்ளனர்

Thu, 10/29/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.